Tag: எம்ஜிஆர்

  • குரல் சரியில்லேயே… இதெல்லாம் எடுபடுமா? எம்ஜிஆர் சொன்ன எஸ்பிபியின் செய்த சாதனை..!

    குரல் சரியில்லேயே… இதெல்லாம் எடுபடுமா? எம்ஜிஆர் சொன்ன எஸ்பிபியின் செய்த சாதனை..!

    பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எப்படிப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரர் என்றும் அவருடைய இசைத்திறனுக்கு எத்தனை இசை ரசிகர்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அப்படிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலையே ஒரு காலகட்டத்தில் விமர்சித்தவர்கள் பலர் இருக்காங்க.

    இதை எம்ஜிஆரே ஒரு விழாவில் வெளிப்படுத்தியுள்ளார். சங்கராபரணம் படத்திலே மிகச்சிறப்பாகப் பாடியதற்காக குடியரசுத்தலைவரின் விருதும், பாராட்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குக் கிடைத்தது. அப்படி விருது கிடைத்த போது சென்னையிலே அதையொட்டி ஒரு பாராட்டு விழா அவருக்கு நடந்தது.

    அந்த விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இன்று இந்த விழாவில் பாராட்டு பெறும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னுடைய அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் பதிவு முடிந்து அதை நான் கேட்டுக் கொண்டு இருந்த போது இந்தக் குரல் எல்லாம் சினிமா உலகத்திலே எங்கே எடுபடும் என்று என் காதுபடவே விமர்சித்தவர்கள் பலர் உண்டு.

    அந்த விமர்சனங்களை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளாமல் அவருடைய குரலை நான் பயன்படுத்தினேன். ஆனால் அன்றைக்கு யார் யாரெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை விமர்சித்தார்களோ, அவர்கள் எல்லாம் பின்னாளில் எஸ்.பி.பி.யை தங்களது படங்களில் பாட வைத்தார்கள். அப்படிப் பாட வைத்ததுதான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சாதனை என்று பாராட்டினார் எம்ஜிஆர்.

  • எம்ஜிஆர் கொடுத்த அற்புத வாய்ப்பு… என்ன டைரக்டரே… இப்படியா மிஸ் பண்ணுவீங்க?

    எம்ஜிஆர் கொடுத்த அற்புத வாய்ப்பு… என்ன டைரக்டரே… இப்படியா மிஸ் பண்ணுவீங்க?


    நாடோடி மன்னன் படம் எம்ஜிஆருக்கு எவ்வளவு பெரிய பேரும், புகழையும், வெற்றியையும் தந்தது என்று எல்லாருக்கும் தெரியும். இந்தப் படம் ஓடினால் நான் நாடோடி. இல்லையேல் மன்னன் என்ற எம்ஜிஆரின் வாக்கு அப்படியே பலித்தது. படத்தைத் தயாரித்து, நடித்து, இயக்கினார் எம்ஜிஆர். படத்தில் இரு வேடங்கள் ஏற்று நடித்த எம்ஜிஆரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை முதலில் ஒரு இயக்குனருக்குக் கொடுத்தார். ஆனால் அவரோ மிஸ் பண்ணி விட்டார். ஏன்? என்னதான் நடந்ததுன்னு பார்க்கலாமா…

    தமிழ்சினிமா உலகின் பிதாமகன் என்று இன்று வரை போற்றிக் கொண்டு இருக்கிற கே.சுப்பிரமணியம் என்ற இயக்குனர் இயக்கிய முதல் திரைப்படம் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த பவளக்கொடி. இது 1934ல் வெளியானது. பல வெற்றிப்படங்களைத் தந்த அவர் இயக்கிய கடைசி படமாக பாண்டித்தேவன் அமைந்தது. எம்ஜி.சக்கரபாணி, டிகே.பகவதி, டிகே.பாலசந்தர், எஸ்.வி.சகஸ்ரநாமம், சந்திரபாபு, பிஎஸ்.சரோஜா, ராஜசுலோசனா, டிஏ.மதுரம் போன்ற பல முக்கியமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    இந்தப் படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டது. ஆனாலும் தோல்வியைத் தழுவியது. அதற்கு முக்கியமான காரணம் அந்தப் படத்தின் தலைப்புதான் என்று சொல்லப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பாண்டித்தேவனின் தோல்விக்கு எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் போன்ற நட்சத்திரங்களின் அலை அந்தக் காலகட்டத்தில் பலமாக வீசியதும் ஒரு முக்கியமான காரணம் என்பது அன்றைய திரைப்பட ஆர்வலர்கள் பலரின் கருத்தாக இருந்தது.

    பாண்டித்தேவன் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து இனி திரைப்படங்களை இயக்குவதில்லை என்று முடிவு எடுத்திருந்தார் கே.சுப்பிரமணியம். அந்தக் காரணத்தினால் தான் நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆர் அவரை இயக்கச் சொல்லி வாய்ப்பு கொடுத்தும் அவர் அதை ஏற்கவில்லையாம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • எம்ஜிஆரை நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் ஆக்கியது அவர்களா? அட அவரே சொல்லிட்டாரே!

    எம்ஜிஆரை நடிகனாகவும், தயாரிப்பாளராகவும் ஆக்கியது அவர்களா? அட அவரே சொல்லிட்டாரே!

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழ்சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டதற்குப் பின்னால் பல திரைப்படங்களைத் தயாரித்து இருக்கிறார். ஒரு சில படங்களை இயக்கி இருக்கிறார். என்றாலும், தயாரிப்பாளர் என்று அவரது பெயர் முதல் முதலாக இடம்பெற்ற படம்னா நாம் என்ற படம்தான்.

    எம்ஜிஆர், கலைஞர் மு.கருணாநிதி, இயக்குனர் காசிலிங்கம், பத்திரிகையாளர் ராஜாராம் நால்வரும் சேர்ந்து உருவாக்கியதுதான் மேகலா பிக்சர்ஸ் என்ற நிறுவனம். இது ஜூபிடர் பிக்சர்ஸோடு சேர்ந்து இணைந்து உருவாக்கிய திரைப்படம் தான் நாம். இந்தப் படத்தின் துவக்க விழா நெப்டியூன் ஸ்டூடியோவில் நடைபெற்ற போது தான் அந்தப் படத்திலே தயாரிப்பாளராக இணைந்தது பற்றி உணர்ச்சிகரமாக உரையாற்றினார் எம்ஜிஆர்.

    ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் என்னை கதாநாயகனாக்கிய நிறுவனம். அதைத் தொடர்ந்து மர்மயோகி என்ற படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். நடிக்க வாய்ப்பு கொடுத்தது மட்டும் இல்லாம அந்தப் படத்தில் ஊதியத்தையும் எனக்குக் கூடுதலாகக் கொடுத்தார்கள் என்பதையும் நான் சொல்லியே ஆக வேண்டும். இன்றைக்கு தமிழ் சினிமாவிலே எனக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. ஓரளவுக்கு செல்வாக்கு உள்ள நடிகனா இருக்கேன்னா அதுக்கு முக்கிய காரணம் ஜூபிடர் பிக்சர்ஸ் முதலாளிகளான முகைதீனும், சோமசுந்தரமும்தான்.

    நான் உங்களுக்கு ரொம்பவே நன்றி கடன் பட்டுருக்கேன். என்னைக் கதாநாயகனாக்கியதோடு மட்டும் நிற்காமல், ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்திலே மாதச்சம்பளத்திற்குப் பணியாற்றிக் கொண்டு இருந்த என்னை இந்தக் கூட்டுத் தயாரிப்பிலே முதலாளியாகவும் அவர்கள் ஆக்கி இருக்கிறார்கள். முதலாளி, தொழிலாளின்னு எல்லாம் வித்தியாசம் பார்க்காம நடிகனும், தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்று நினைச்சாங்களே. அந்த பெருந்தன்மையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை என்று அந்த விழாவிலே உணர்ச்சி பொங்க பேசி இருக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.

  • உதவி கேட்க ஓடோடி வந்த நாடோடி மன்னன் உதவியாளர்… எம்ஜிஆர் செய்த அந்த மகத்தான செயல்!

    உதவி கேட்க ஓடோடி வந்த நாடோடி மன்னன் உதவியாளர்… எம்ஜிஆர் செய்த அந்த மகத்தான செயல்!

    எம்ஜிஆரின் இயக்கத்தில் உருவான நாடோடி மன்னன் படத்தில் உதவி இயக்குனராக கோபாலகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்தார். அந்தப் படத்திலே மிகத் திறமையாக அவர் வேலை செய்ததைக் கண்ட எம்ஜிஆர் தன்னுடைய ஒரு படத்தை இயக்குகின்ற வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்று கூட எண்ணினார்.

    அடிமைப்பெண் படத்தை இயக்கத் திட்டமிட்ட போது அந்த கோபாலகிருஷ்ணனையும், ராமதாஸையும் இணைத்து அவர்கள் ரெண்டு பேரையும் அந்த படத்தை டைரக்ட் செய்யச் சொல்லணும் என்பதுதான் எம்ஜிஆரின் எண்ணமாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்ததால அந்த வாய்ப்பு அவர்கள் கையை விட்டு நழுவிப் போனது. அதன்பிறகுதான் கே.சங்கர் அந்தப் படத்தை இயக்கினார்.

    அப்படிப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஒரு காலகட்டத்தில் வேலை இல்லாத காரணத்தால வறுமையில் வாடினார். வீட்டு வாடகையைக் கூட கொடுக்க முடியல. நான்கைந்து மாதம் வீட்டு வாடகைப் பாக்கி இருந்ததால அவரோட வீட்டு ஓனர் வீட்டைப் பூட்டிட்டு பணத்தைக் கொடுத்துட்டு வீட்டுக்குள்ள வாங்க. அதுவரைக்கும் சாவி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். யார் யாரிடமோ உதவி கேட்டுப் பார்த்தார் கோபாலகிருஷ்ணன். எங்கேயுமே பணம் கிடைக்கல.

    என்ன பண்றதுன்னே புரியல. அப்படிப்பட்ட சூழ்நிலையில அவருக்கு நினைவு வந்த ஒரே நபர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான். அப்போது பட்டிக்காட்டு பொன்னையா படத்தின் படப்பிடிப்பில் எம்ஜிஆர் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஓடோடிச் சென்றார் கோபாலகிருஷ்ணன். இவர் எம்ஜிஆரை சென்று பார்ப்பதற்கு முன்னாலே அவரைப் பார்த்த எம்ஜிஆர், அவரைத் தன் அருகில் அழைத்து என்ன விஷயம்? ஏன் இப்படி உடல் மெலிந்து இருக்கீங்க? என்ன பிரச்சனை என்று அவரைப் பார்த்துக் கேட்டார். ஓ என்று அழத் தொடங்கிய கோபாலகிருஷ்ணன் தன்னுடைய பிரச்சனை எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துரைத்தார்.

    நான்கைந்து மாதமாக வாடகைக் கொடுக்கலன்னு சொல்றீங்க. அப்படிப்பட்டவர் என்னை எப்போ வந்து பார்த்துருக்கணும்? நாலு மாசத்துக்கு முன்னாடியாவது என்னை வந்து பார்த்துருக்க வேண்டாமா? எவ்வளவு வாடகைன்னு சொல்லுங்க என்று அவரைப் பார்த்துக் கேட்டார். மூவாயிரம் ரூபாய் என்று அந்த கோபாலகிருஷ்ணன் சொன்ன உடனே சரி இன்று இரவுக்குள் அந்தப் பணம் உன்னை வந்து சேரும் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் எம்ஜிஆர். உடனே பக்கத்தில் இருந்த ஸ்டண்ட் கலைஞரான ராம்கிருஷ்ணனை அழைத்தார். அவரிடம் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து இன்று இரவுக்குள் எப்படியாவது கொண்டு போய் கோபாலகிருஷ்ணனிடம் சேர்த்து விடுங்கள் என்று சொன்னார் எம்ஜிஆர். அன்று இரவு பெரும் மழை.

    பணத்தைக் காலையில் கொடுத்து விடலாமா என்ற எண்ணம் கூட ராம்கிருஷ்ணனுக்கு இருந்தது. ஆனாலும் எம்ஜிஆர் சொல்லி அனுப்பிச்சிருக்காரு. இன்று இரவுக்குள் பணம் வந்து சேர்ந்துடும்னு. எம்ஜிஆர் சொல்லியும் அதைக் கொடுக்கலைன்னா அவரோட வாக்கு தப்பி விடுமே. அது கூடாதுன்னு கொட்டும் மழையிலும் கோபாலகிருஷ்ணனிடம் சென்றார் ராம்கிருஷ்ணன். அந்த பத்தாயிரம் ரூபாயைக் கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்து விட்டு இதுல மூவாயிரம் ரூபாயை வாடகைக்குக் கொடுங்க.

    மிச்சம் ஏழாயிரம் ரூபாயை உங்களுக்காக வைத்துக் கொள்ளச் சொன்னார் எம்ஜிஆர் என்றார். அப்போது அந்தக் கோபாலகிருஷ்ணன் கண்களில் இருந்து தரதரவென்று கண்ணீர் வழிந்தோடிக் கொண்டு இருந்தது. எம்ஜிஆரை இன்றைக்கும் தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் எம்ஜிஆரோட மனிதாபிமானம் தான்.

  • எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

    எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

    தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அப்படி இருந்த அவரிடமே கதாநாயகியான ஒருவர் நேருக்கு நேராக மோதியுள்ளார். யார் என்ன சம்பவம்னு பார்க்கலாமா…

    நாடோடி மன்னன் படத்தில் எம்ஜிஆருக்கும், பானுமதிக்கும் பிரச்சனையா? அப்புறம் ஏன் சரோஜாதேவியை நடிக்க வைத்தார் எம்ஜிஆர் என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

    நாடோடி மன்னன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியபோதே அந்தப் படத்தின் கதாநாயகியான பானுமதிக்கும், அந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்து இயக்கிய எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து விட்டன.

    ஒரு நாள் ஒரு காட்சியைத் திரும்ப திரும்ப படமாக்கியபோது இதுக்குத் தான் ஒரு நல்ல டைரக்டரைப் போட்டுப் படம் எடுத்துருக்கணும். கே.சுப்பிரமணியத்தைப் போட்டுப் படமாக்கி இருந்தா இது மாதிரி பிரச்சனை எல்லாம் வந்துருக்காது என எம்ஜிஆர் முகத்துக்கு நேராகவே கூறினார். அது மட்டும் இல்லாம அந்தப் படத்தின் பாடல்களின் போது, பாடல்களின் கம்போசிங்கின் போது எல்லாம் எம்ஜிஆருக்கும், பானுமதிக்கும் இடையே உரசல்கள் இருந்துக்கிட்டே தான் இருந்தது.

    அதன் காரணமாகத் தான் இனியும் அவரோட ஃபோர்ஷனைத் தொடர முடியாதுங்கறதால அதை அப்படியே கட் பண்ணிட்டு இன்னொரு கதாநாயகியை அறிமுகப்படுத்துவது என முடிவெடுத்தார் எம்ஜிஆர். அப்படி அந்தப் படத்துக்குள்ளே வந்தவர் தான் சரோஜாதேவி என்றார் எம்ஜிஆர்.

  • ஒரே பாடலில் இத்தனை விஷயமா…? கண்ணதாசன் எம்ஜிஆருக்கு கொடுத்த அதி அற்புத பாடல்!

    ஒரே பாடலில் இத்தனை விஷயமா…? கண்ணதாசன் எம்ஜிஆருக்கு கொடுத்த அதி அற்புத பாடல்!

    மனித குல வரலாற்றை ஒரு பாட்டுக்குள்ள சொல்றதே ரொம்ப சிரமம். ஆனால் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டுக்குள்ள அவ்வளவு அழகா சொல்லிருப்பாரு. அது என்னன்னு பாருங்க.

    1964ல் டிஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான படம் பணக்கார குடும்பம். மக்கள் திலகம் எம்ஜிஆர், சரோஜாதேவி, அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதி டிஎம்.சௌந்தரராஜன், எல்ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே பாடல். இந்தப் பாட்டுக்கும், படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

    பணக்காரக் குடும்பம்னாலே குடும்பம் தொடர்பாகத் தான் பேசணும். அப்புறம் ஏன் இப்படி ஒரு பாடல்னு கேள்வி எழலாம். எம்ஜிஆர் படம்னாலே மக்கள் ஏதாவது ஒரு நல்லது சொல்வார்னு எதிர்பார்ப்பாங்க. இன்னொன்னு கவியரசர் கண்ணதாசனுக்கு திடீர்னு இந்த இடத்துல இந்தப் பாடலை வைத்தால் நல்லா இருக்குமேன்னு ஒரு எண்ணம் தோணும். அப்படி வந்தது தான் இந்தப் பாடல்.

    அசோகனின் மகள் சரோஜாதேவி. அப்பா வசதியான குடும்பமாக இருந்தாலும் அவரை விட்டு வெளியேறி விடுகிறார் எம்ஜிஆர். இவர் சரோஜாதேவியைக் காதலிக்கிறார். இடையில் பல எதிர்ப்புகள் வந்தாலும் கடைசியில் சரோஜாதேவியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதுதான் கதை. இந்தப் படத்தில் வரும் பாடல் தான் ஒன்று எங்கள் ஜாதியே. இந்தப் பாடலின் பல்லவியில் சமத்துவத்தைப் பேசி இருக்கிறார் கண்ணதாசன்.

    ”ஒன்று எங்கள் ஜாதியே… ஒன்று எங்கள் நீதியே… உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே…” இவ்ளோதான் பல்லவி. இங்கு கவனிக்க வேண்டியது ஏமாற்றுறவங்க எல்லாம் ஒருவர் பெற்ற மக்கள் அல்ல. உழைக்கும் மக்களே என்கிறார். அடுத்து பாடலில் சமத்துவத்தைக் கொண்டு வந்துள்ளார். நிறத்தில் அல்ல என அழுத்தமாகச் சொல்கிறார். ”வெள்ளை மனிதன் வியர்வையும், கருப்பு மனிதன் கண்ணீரும் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே” என எந்த இடத்திலும் சந்தம் இடிக்காம அவ்வளவு நேர்த்தியாக அழகாக எழுதியுள்ளார் கவியரசர்.

    மன்னராட்சி, மக்களாட்சி என்று சொல்லி விட்டு ”இல்லை என்பது இல்லை நாங்கள் வாழும் நாட்டிலே…” என 2வது சரணத்தில் சொல்லி இருக்கிறார். இங்கும் உழைப்பைப் பற்றித் தான் பேசுகிறார். உழைக்கும் மக்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா இல்லை என்ற சொல்லே இருக்காது என்கிறார்.

    அடுத்த சரணத்தில் மனித குல வரலாறு எப்படி தோன்றியது என்பதை வெகு அழகாக சொல்லி இருக்கிறார். ”ஆதிமனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான். அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான். மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான். நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான். இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான். வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்” என்று முக்காலத்தையும் நயம்படச் சொல்கிறார் கண்ணதாசன். இது படித்தவர், படிக்காதவர் என அத்தனை பேருக்கும் அவ்வளவு எளிதாகப் புரியும்.

  • 100வது நாள் விழாவுக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்… மறுகணமே எம்ஜிஆர் சொன்ன வார்த்தை!

    100வது நாள் விழாவுக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்… மறுகணமே எம்ஜிஆர் சொன்ன வார்த்தை!

    அந்தக் காலத்தில் எல்லாம் திரை உலகில் 100வது நாள் படம் ஓடுவது என்பது சாதாரண விஷயம். பல முன்னணி கதாநாயர்களின் படங்கள் இப்படி வெற்றி விழாவைக் கொண்டாடும். அதில் ஒன்று தான் இந்த ஜல்லிக்கட்டு படம். சத்யராஜ், சிவாஜி இணைந்து நடித்த இந்தப் படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்துள்ளார்.

    படம் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. படத்துக்கான வெற்றி விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். எம்ஜிஆர் கலந்து கொண்ட கடைசி சினிமா நிகழ்ச்சியும் இதுதான். எப்படி கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார்னு பாருங்க.

    ஜல்லிக்கட்டு படத்தின் பாராட்டு விழாவுக்கு அழைப்பு சொன்னதுமே எம்ஜிஆர் உடனே ஒத்துக்கிட்டாரா? இல்ல. முதல்ல வரலன்னு சொன்னாரான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

    எனக்கே இது ஆச்சரியமான விஷயம். ஒருநாள் காலையில புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நான், சத்யராஜ், என்னுடைய சகோதரர் சித்ரா ராமு ஆகிய மூவரும் சந்தித்தோம். ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள் விழாவுல நீங்க கலந்துக்கணும்னு கோரிக்கை வைக்கிறோம். என்னைக்கு ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள்னு கேட்டாரு. டிசம்பர் 5ந் தேதி 100 நாள் விழா வருதுன்னு நான் சொன்னதும் விழாவை வச்சிக்கோங்க.

    நான் வர்றேன் என்று மறுகணமே சொல்லி விட்டார் எம்ஜிஆர். அப்படி உடனடியாக அவர் விழாவுக்கு வருவார்னு நாங்க மூவருமே கனவுல கூட நினைச்சிப் பார்க்கல அப்படிங்கறதுதான் உண்மை. இன்னைக்கு நினைச்சிப் பார்த்தா கூட அந்தளவுக்கு ஆச்சரியமா இருக்குது அந்த சம்பவம். அதற்கு முன்னால் இந்த மாதிரி தேதி கேட்ட உடனே எம்ஜிஆர் ஒப்புக்கொண்ட சம்பவங்கள் இருக்கான்னு எனக்குத் தெரியல என்கிறார் சித்ரா லட்சுமணன்.

  • எம்எஸ்.விஸ்வநாதனின் குரு அவரா? அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

    எம்எஸ்.விஸ்வநாதனின் குரு அவரா? அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே!

    தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் ஜாம்பவான்கள் நடித்த பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்து பல வெற்றிகரமான பாடல்களைக் கொடுத்தவர் எம்எஸ்.விஸ்வநாதன். இவருடன் இணைந்து ராமமூர்த்தியும் இசை அமைத்தார். இவர்களை மெல்லிசை மன்னர்கள் என்று சினிமா உலகம் போற்றியது. இவருக்குப் பிறகு வந்தவர் தான் இசைஞானி இளையராஜா. மெல்லிசை மன்னர்களின் குருநாதர் யாருன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

    ஒரு காலகட்டத்தில் தமிழிலும், தெலுங்கிலும் கொடிகட்டிப் பறந்த பாடல்கள்னா அது சி.ஆர்.சுப்புராமனின் இசையில் உருவான தேவதாஸ் படத்தின் பாடல்கள். துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே, உலகே மாயம், எல்லாம் மாயை தானா? ஆகிய என்றுமே மறக்க முடியாத பல பாடல்களுக்கு இசை அமைத்த பெருமைக்குரிய இசை அமைப்பாளர் தான் சிஆர்.சுப்புராமன்.

    அவர் இசை அமைப்பாளர் ஆனதே ஒரு பெரிய கதை. செஞ்சுலெஷ்மி என்ற படத்துக்கு வயலின் வாசிக்க சென்ற கலைஞர் தான் சிஆர்.சுப்புராமன். இறுதியாக அந்தப் படத்தின் பாடல்கள் சிலவற்றுக்கு இசை அமைக்கக்கூடிய வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. அந்தப் பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதன் காரணமாக இசை அமைப்பாளராக உருவானவர் தான் சி.ஆர்.சுப்புராமன்.

    தமிழ்சினிமா உலகிலே கொடிகட்டிப் பறந்த இசை அமைப்பாளர்கள்னு மெல்லிசை மன்னர்கள் எம்எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ், கண்டசாலா போன்ற பலரும் இவருடைய சீடர்கள் தான் என்பது சி.ஆர்.சுப்புராமனின் தனிப்பெருமை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • காக்கா ராதாகிருஷ்ணனுக்கு உயர்ந்த சம்பளம்… எம்ஜிஆர் செய்த பலே ஐடியா!

    காக்கா ராதாகிருஷ்ணனுக்கு உயர்ந்த சம்பளம்… எம்ஜிஆர் செய்த பலே ஐடியா!

    காக்கா ராதாகிருஷ்ணன் யாருன்னு நம்மில் பலருக்கும் தெரியும். இவர் தான் சிவாஜியையே சினிமாவுக்கு அழைத்து வந்தவர். ஆனால் அவர் எம்ஜிஆரைப் பற்றி என்ன சொல்றாருன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

    தமிழ்சினிமா உலகிலே எப்படிப்பட்ட சாதனையாளர் காக்கா ராதாகிருஷ்ணன் என்பது எல்லாருக்கும் தெரியும். நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்து அதில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தார் காக்கா ராதாகிருஷ்ணன். தான் அப்படிப்பட்ட சாதனைகளைச் செய்தேன் என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் ரெண்டு பேர்.

    அவங்களைக் குறிப்பிட்டே ஆகணும். அந்த ரெண்டு பேர்ல முதலிடத்தில் இருப்பவர் கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன். என்னுடைய வாழ்க்கையில விளக்கேற்றி வைத்தவர் அவர்தான். அவர் இல்லன்னா சினிமா உலகத்துல நான் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்க வாய்ப்பே இல்லை.

    அதே மாதிரி சினிமா உலகத்துல நான் மறக்க முடியாத இன்னொரு நபர் எம்ஜிஆர். தாய் மகளுக்குக் கட்டிய தாலிங்கற படத்துல நான் நடிச்சிக்கிட்டு இருந்தேன். இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு உங்களுக்கு சம்பளம் எவ்வளவுன்னு கேட்டார் எம்ஜிஆர். அதுக்கு மூவாயிரம் ரூபாய் என்றார் காக்கா ராதாகிருஷ்ணன். உடனே தயாரிப்பாளரை அழைத்தார் எம்ஜிஆர். அண்ணனுக்கு இந்தப் படத்துல 5000 ரூபாய் சம்பளம் கொடுங்க.

    அதுல 2000 ரூபாய் என் கணக்குல எடுத்துக் கொடுங்க என்றார் எம்ஜிஆர். இந்தப் படத்துல 5000 ரூபாய் சம்பளம் வாங்கியதுக்குப் பிறகுதான் சினிமா உலகிலே என்னுடைய சம்பளமே உயர்ந்தது. அதிகமான சம்பளத்தை எனக்கு வாங்கிக் கொடுத்ததைத் தாண்டி என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர். என்னுடைய குடும்ப நலத்தைப் பற்றியும், என்னிடம் விசாரித்தவர்.

    அவருக்கு அடுத்து என்மீது அதிகமான அக்கறைக் காட்டியவர்னா அது கமல்ஹாசன்தான். அவருடன் சேர்ந்து நடித்த தேவர்மகன் படத்தை என்னால மறக்கவே முடியாது. என் வாழ்நாளில் நான் நடித்த மிக முக்கியமான திரைப்படம் அது என்று ஒரு பத்திரிகை பேட்டியில் காக்கா ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.

  • ரசிகர்களுக்குள் நடக்க இருந்த பெரும் மோதல்… தவிர்க்க எம்ஜிஆர், சிவாஜி செய்த ஐடியா!

    ரசிகர்களுக்குள் நடக்க இருந்த பெரும் மோதல்… தவிர்க்க எம்ஜிஆர், சிவாஜி செய்த ஐடியா!

    தமிழ்சினிமா உலகின் அடையாளங்களாக இருந்த நட்சத்திரங்கள்னா ஒண்ணு மக்கள் திலகம் எம்ஜிஆர். இன்னொன்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது குறையவில்லை. ஆனால் அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் எப்படிப்பட்ட நட்பு இருந்ததுன்னு தெரியுமா? இதோ அதற்கான ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.

    1957ல் நான் விரும்பும் நட்சத்திரம் என்ற பெயரில் குமுதம் ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்று விரும்பியது. அதனுடைய முக்கிய நோக்கம் என்னன்னா நான் விரும்பும் நட்சத்திரம் எம்ஜிஆரா.., சிவாஜியா… என்று ரசிகர்களைப் பார்த்துக் கேட்பதுதான்.

    அப்படிப்பட்ட போட்டியை நடத்தினால் நிச்சயமாக தங்களுடைய ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் வரும் என்று உணர்ந்ததால் எம்ஜிஆர், உடனடியாகக் குமுதம் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘இது போன்ற போட்டியை நாங்க வரவேற்கவும் இல்லை. ரசிக்கவும் இல்லை… என்று எழுதினார்.

    எம்ஜிஆர் மட்டுமல்ல. அவர் அப்படி ஒரு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜியும் குமுதம் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். இப்படி ஒரு போட்டியை நீங்க நடத்தப் போறீங்க என்ற செய்தி வந்தபோதே உங்க நிருபரைக் கூப்பிட்டு ‘இது போன்ற போட்டியை நடத்தாதீங்கன்னு நான் திட்டவட்டமாக சொல்லிட்டேன். அதனால அன்புகூர்ந்து இதுபோன்ற போட்டியை நீங்க நடத்தாதீங்க’ன்னு எழுதினார்.

    ரெண்டு பேருக்கும் நடுவில் எப்படிப்பட்ட போட்டி இருந்த போதும் ஒரு பிரச்சனைன்னு எப்படி இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்வதற்காகத் தான் இந்த சம்பவத்தை நான் குறிப்பிட்டு இருக்கிறேன் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.