‘நான் சிம்புவின் அம்மா இல்லை… சந்திரா தான்!’ – ‘அரசன்’ படம் குறித்து ஆண்ட்ரியா விளக்கம்

Written by

in

,

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், நடிகை ஆண்ட்ரியா அளித்துள்ள சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், விக்ராந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், படத்திற்கு அனிருத் இசையமைக்க, கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘அரசன்’ திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆண்ட்ரியா, “நான் சிம்புவோட அம்மா இல்லை… நான் சந்திராதான்” என்று சிரித்தபடி கூறினார். இந்த ஒரு வரி பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’, அவரது ‘வடசென்னை’ திரைப்பட யுனிவர்ஸை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய படைப்பாகும். ‘வடசென்னை’ படத்தில் இடம்பெற்ற ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்திலேயே ஆண்ட்ரியா மீண்டும் நடித்து வருகிறார். இதன் காரணமாக, அவரது கதாபாத்திரம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆண்ட்ரியா இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ஆண்ட்ரியாவின் இந்த விளக்கத்திற்குப் பிறகு, அவரது ‘சந்திரா’ கதாபாத்திரம் படத்தில் என்ன மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.