Author: sankaran v

  • விஜய் இதுவரை பேட்டி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா? அட இப்பதானே தெரியுது!

    விஜய் இதுவரை பேட்டி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா? அட இப்பதானே தெரியுது!

    தவெக தலைவர் விஜய் அரசியல் களத்துக்கு வந்ததுல இருந்தே ஊடகங்களில் பேசுபொருளாகி விட்டார். ஆனால் இதுவரை பேட்டி தான் கொடுக்கல. ஆனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம். ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு செய்தியை வெளியிடுகின்றன. இதன் பின்னணி குறித்து பிரபலம் ஒருவர் இப்படி சொல்கிறார்.

    பொதுவாக தேர்தல் என்றாலே மக்கள் பரபரப்பாகி விடுவாங்க. அவர்களைத் தாண்டி ஊடகங்கள் பரபரப்பாகிடுவாங்க. எப்பவும் 2 முனை போட்டி பலமா இருக்கும். அதையும் தாண்டி 3முனை போட்டின்னா அந்தக் கட்சி ஏதோ ஒரு வகையில மக்களுக்காக போராடி இருப்பாங்க. ஆனா தவெக என்ற ஒரு கட்சி திடீர்னு தோன்றியது. அங்கு எந்த வித அரசியல் அறிவும் இல்லாத கட்சி. செங்கோட்டையன் மாதிரி விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர். அவரே சைலண்ட் மோடுல தான் இருக்காரு. அதைத் தவிர்த்துட்டுப் பார்த்தா அது ஒரு கட்சியான்னே கேள்வி எழுகிறது.

    ரஜினி ஏறத்தாழ 50 ஆண்டுகள் சினிமாவில இருக்காரு. அவருக்கிட்ட போய் மைக்கை நீட்டி கேட்டா அவருக்கு என்ன தெரியுதோ அதைச் சொல்வாரு. ஒண்ணுமே இல்லன்னாலும் நோ கமெண்ட்ஸ் என்பார். ஊடகவியலாளர்களைப் பார்த்து கார் கண்ணாடியை இறக்கிய விஜய்னு செய்தி போடுறாங்க. இதெல்லாம் பார்த்தா எவ்வளவு வெட்கங்கெட்ட விஷயத்தைப் பண்ணக்கூடிய ஊடகமா இருக்கு. ஊடக அரண்ணா குறைந்தபட்ச நியாயம் இருக்கணும்.

    இன்றைய கருத்துக்கணிப்பில் மோடியைத் தூக்கிப் பிடிக்கும் நிறுவனம் தான் தவெக ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்கிறது. ஒரு ஊடகம்னா தன்னை மதிக்கிறவனைக் கொஞ்சமாவது மதிக்கணும். விஜய் இதுவரைக்கும் எந்த ஒரு நாளிதழ், மாத இதழுக்கும் விஜய் பேட்டி கொடுக்கல. அப்படின்னா ஏன் இப்படி செய்றாருன்னா நீ எல்லாம் எனக்கு ஆள் கிடையாதுய்யா என்கிற எண்ணம் தான். அப்படின்னா ஊடகங்கள் ஏன் இவருக்குக் கொடி பிடிக்கிறாங்கன்னா எல்லாம் பணம்தான்.

    மக்கள் இந்த ஊடகங்கள் சொல்றதை எல்லாம் வச்சிக்கிட்டு இதெல்லாம் உண்மையான்னு நம்பக் கூடாது. விஜய் வேலை என்னன்னா இளைஞர்களைக் கொஞ்சம் கூட சிந்திக்க விடாம, தான் ஒரு ஆள் ஆட்சிக்கு வரணும்கறதுக்காக பல குடும்பங்களைப் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் சிதைத்த மோசமான இடம் விஜய்க்கு உண்டு. அவரை இனம் கண்டு மக்கள் ஒதுக்க வேண்டிய வேலை, தேவை எல்லாம் இருக்கு. ஒரு அரசியல் தலைவன்னா உங்க அறிவை மேம்படுத்துனா அவன் உண்மையான தலைவன்.

    உங்க சமூக அந்தஸ்தை மேம்படுத்துனா அவன்தான் உண்மையான அரசியல் தலைவன். மாறாக, உங்களுடைய அறிவை சிறுமைப்படுத்தி, உங்க மூளையைப் பிறழ்வு ஏற்படச் செய்தால் அவன் நல்ல அரசியல் தலைவன் கிடையாது. அவன் ஒரு மோசமான அரசியல் தலைவன். அவனுக்கு மக்களைப் பத்தின எந்த அக்கறையும் கிடையாது.

    தான் மட்டும் தான் இருக்கணும். மத்தவங்க அடிமையா இருக்கணும் என்கிற மோசமான மனநிலையில் இருப்பவனால மட்டும்தான் இப்படி உருவாக்க முடியும். அறிவாளிகளை உருவாக்காத, சிந்திக்க விடாத விஜய் எப்படிப்பட்டவர்னு நீங்களே முடிவு பண்ண வேண்டிய தருணம்தான் இது. வாக்கு எண்ணிக்கை வரட்டும். இன்னும் 2 நாள் தான் இருக்கு. பார்ப்போம் என்கிறார் பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.

  • சரியில்ல… காட்சியை மாற்றுங்க… நாகேஷ் சொன்னதைக் கேட்டு அசந்துபோன டைரக்டர்!

    சரியில்ல… காட்சியை மாற்றுங்க… நாகேஷ் சொன்னதைக் கேட்டு அசந்துபோன டைரக்டர்!

    பொதுவாக படப்பிடிப்புத் தளத்தில் அந்த டைரக்டருக்கு யாராவது நடிகர்கள் ஆலோசனைக் கூறினால் பெரும்பாலான டைரக்டர்கள் அந்த ஆலோசனையை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் தான் இந்த இயக்குனர். தமிழ், தெலுங்கு, இந்தியில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் தான் எல்வி.பிரசாத்.

    ஒரு வீட்டில் ஒருவர் இறந்து விட்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் எப்படி துக்கத்தில் இருப்பார்கள் என்ற காட்சியைப் படமாக்கிக் கொண்டு இருந்தார் எல்வி.பிரசாத். வீட்டு வேலைக்காரன் கேவி கேவி அழ, இன்னும் கொஞ்சம் அழு. இன்னும் கொஞ்சம் அழுன்னு காட்சிகளைப் படமாக்கிக் கொண்டு இருந்தார் பிரசாத். ‘கொஞ்சம் கட் சொல்றீங்களா”ன்னு நாகேஷ் சொல்ல, எதுக்காகக் கட் பண்ணச் சொன்னன்னு கேட்கிறார் எல்வி.பிரசாத். ;’சார் செத்தது வீட்டு எஜமானி.

    அந்த அம்மா புருஷனே அப்படி அழல. வேலைக்காரன் இந்தளவுக்கு விக்கி விக்கி அழுதான்னா படத்தைப் பார்க்கிற ரசிகர்களுக்கு சந்தேகம் வராதா?” என்று டைரக்டரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார் நாகேஷ். படப்பிடிப்பு தளத்தில் டைரக்டரைப் பார்த்து இப்படி ஒரு நடிகர் சொன்னாருன்னா, ‘தம்பி இந்தக் காட்சியை எப்படி படமாக்குவதுன்னு எனக்குத் தெரியும். நீ உன் வேலையைப் பாரு. செட்டை விட்டு வெளியே போ. காட்சிகளைப் படமாக்கி விட்டு உன்னை கூப்பிடுறேன”; என்பார்.

    ஆனால் இங்கு நடந்தது அப்படி அல்ல. டைரக்டரிடம் நாகேஷ் இப்படி சொன்னார். எஜமானி இறந்த துக்கத்தைத் தாங்கிக்கிட்டு அப்படி வெளியே போய் துண்டை எடுத்துட்டு வாயைப் பொத்தியபடி அழுதான்னா ரொம்ப நல்லாருக்கும்னு நாகேஷ் சொன்னார். அந்த யோசனையை ஏற்றுக் கொண்டு திரைக்கதையைப் படமாக்கியதோடு மட்டும் இல்லாமல் நாகேஷைப் பார்த்து எல்வி.பிரசாத் ஒண்ணு சொல்றாரு. அதுதான் முக்கியம்.

    ‘நாகேஷ் ஒரு டைரக்டராகக்கூடிய எல்லா திறமையும் உங்கிட்ட இருக்கு” என்று அவரைப் பாராட்டி இருக்கிறார் எல்வி.பிரசாத். இந்த பெருந்தன்மை எல்லாம் எத்தனை இயக்குனர்ககள்கிட்ட எதிர்பார்க்க முடியும்? என்று கேட்கிறார் பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

  • பீரியடு பிலிம்னுட்டு இப்படியா எடுப்பாங்க? கர படத்தை வறுத்தெடுத்த புளூசட்டைமாறன்!

    பீரியடு பிலிம்னுட்டு இப்படியா எடுப்பாங்க? கர படத்தை வறுத்தெடுத்த புளூசட்டைமாறன்!

    விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் கர. தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை இதுதான். 90களில் ஈராக், குவைத் போர் நடந்தது. இந்த சமயத்தில் இன்டர்நேஷனல் மில்டரி போய் போரை முடித்து வைத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் நடக்குற கதை. அப்போ பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நடக்குற மாதிரி கதை சொல்லப்பட்டுள்ளது. ஹீரோ தனுஷ் திருட்டு வேலையில் இறங்கி மாட்டிக் கொள்கிறார். அதிகாரியை அடித்துவிட்டு தப்பி விடுகிறார். காதலியை அழைத்து ஆந்திரா போய் ஒரு ஓட்டலில் வேலை செய்கிறார்.

    கொஞ்சநாளில் அவருக்கே சலிப்பு வருகிறது. நாமே ஒரு தொழில் செய்யலாம்னு நினைத்து ஊரில் ஒரு ஓட்டல் வைக்கலாம்னு வர்றாரு. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுல இவரது டிராக்டர் ஓடாம இருக்கு. வங்கியில் டியூ கட்ட வேண்டி இருக்கு. சொத்தை அடமானம் வைத்துதான் கடன் வாங்கி இருக்காங்க. அதனால் சொத்தை வங்கி ஜப்தி செய்கிறது. பெரிய தொகை தேவைப்படுகிறது. அப்போ தான் சொத்தை மீட்க முடியும். அதனால ஹீரோ மறுபடியும் கொள்ளை அடிக்கிறார்.

    இப்போ அதே அதிகாரி மீண்டும் பிடிக்கிறார். அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. இது ஒரு பீரியட் பிலிம். கதைக்கு சுவாரசியமான திரைக்கதை இல்லை. வங்கி கொள்ளை அடிப்பதுதான் கதை. வங்கியைக் கொள்ளை தான் அடிக்கப் போறாங்கன்னு உயர் அதிகாரிக்குத் தெரிந்தபிறகும் அவரது நடவடிக்கை பெரிதாக இல்லை. சின்ன விவசாயிகள் கூட வீட்டு வீட்டுக்கு டிராக்டர் வாங்கி வைப்பது எல்லாம் அபத்தம். வங்கி அதிகாரின்னா வசூல் பண்ணித்தானே ஆகணும். அவரைக் கெட்டவனா காட்டுறாங்க.

    கந்து வட்டிக்காரன் மாதிரி காட்டுறாங்க. சூரஜ் வெஞ்சனமூர்த்தி சிரிப்பு போலீஸ் அதிகாரியாகத் தான் காட்டுறாங்க. வில்லன் மாதிரி இல்லை. படம் டெட் ஸ்லோவா இருக்கு. படத்தைப் பார்க்க போக முக்கிய காரணம் தனுஷைத் தாண்டி போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவோட படம். நல்லா இருக்கும்னு நினைச்சா இது விறுவிறுப்பு இல்லாம எப்படா முடியும்கற மாதிரி இருந்தது. ரொம்ப போராகிப் போச்சு என்கிறார் பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன்.

  • மனைவிக்குக் கட்டளையிட்ட ஏஎம்.ராஜா… ஆனா ஸ்ரீதர்கிட்ட  ஒண்ணும் பலிக்கலயே!

    மனைவிக்குக் கட்டளையிட்ட ஏஎம்.ராஜா… ஆனா ஸ்ரீதர்கிட்ட ஒண்ணும் பலிக்கலயே!

    அந்தக் காலத்தில் தமிழ்த்திரை உலகில் ஏஎம்.ராஜா, ஜிக்கி என்றால் அவ்ளோ மவுசு. அவர்கள் பாடும் பாடல்கள் எல்லாமே அருமையிலும் அருமையாக இருக்கும்.

    மயக்கும் மாலை பொழுதே நீ வா வா, வாரோயோ வெண்ணிலாவே, பாட்டு பாட வா, தனிமையிலே இனிமை காண முடியுமா, காயிலே இனிப்பதென்ன, தென்றல் உறங்கிய போதும் ஆகிய பாடல்களை இப்போது கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்ளோ இனிமை, ரசனையுடன் கூடிய இசையில் ஜிக்கி தன் காந்தக்குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டு இருப்பார்.

    ஏ.எம்.ராஜாவும், ஜிக்கியும் எப்படி மணவாழ்வில் இணைந்தார்கள்? அதன்பிறகு ஜிக்கியின் வாழ்வில் நடந்த மாற்றம் என்னன்னு பார்க்கலாமா…

    தமிழ்சினிமா உலகில் பல வெற்றிப்பாடல்களைப் பாடியவர் ஜிக்கி. இவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது. அதனால்தான் அவரது பாடல்களுக்கு ஏராளமான இசை ரசிகர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட பாடல்களைப் பாடிய ஜிக்கியை உருகி உருகி காதலித்தவர் தான் பாடகரும், இசை அமைப்பாளருமான ஏஎம்.ராஜா.

    அவருடைய காதலை ஜிக்கியும் ஏற்றுக் கொண்டதால் தான் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு அப்புறம் ஜிக்கி பாடுவதை ஏஎம்.ராஜா விரும்பவில்லை. திருமணத்திற்குப் பிறகு அவர் இசை அமைத்த படம் கல்யாணப்பரிசு. அது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்தில் கூட ஜிக்கிக்குப் பாட வாய்ப்பே தரவில்லையாம் ஏஎம்.ராஜா.

    அந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் வற்புறுத்தியதன் பேரில் தான் துள்ளாத மனமும் துள்ளும் என்ற பாடலை ஜிக்கியைப் பாட விட்டார். திரைப்படங்களிலே பாடக்கூடாது என்று ஜிக்கியின் கணவர் தடைவிதித்ததால் ஜிக்கியின் உடல்நலம் கூட ஒரு காலகட்டத்தில் பாதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் இசை விமர்சகர் வாமனன்.

  • குரல் சரியில்லேயே… இதெல்லாம் எடுபடுமா? எம்ஜிஆர் சொன்ன எஸ்பிபியின் செய்த சாதனை..!

    குரல் சரியில்லேயே… இதெல்லாம் எடுபடுமா? எம்ஜிஆர் சொன்ன எஸ்பிபியின் செய்த சாதனை..!

    பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எப்படிப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரர் என்றும் அவருடைய இசைத்திறனுக்கு எத்தனை இசை ரசிகர்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அப்படிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலையே ஒரு காலகட்டத்தில் விமர்சித்தவர்கள் பலர் இருக்காங்க.

    இதை எம்ஜிஆரே ஒரு விழாவில் வெளிப்படுத்தியுள்ளார். சங்கராபரணம் படத்திலே மிகச்சிறப்பாகப் பாடியதற்காக குடியரசுத்தலைவரின் விருதும், பாராட்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குக் கிடைத்தது. அப்படி விருது கிடைத்த போது சென்னையிலே அதையொட்டி ஒரு பாராட்டு விழா அவருக்கு நடந்தது.

    அந்த விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இன்று இந்த விழாவில் பாராட்டு பெறும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னுடைய அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் பதிவு முடிந்து அதை நான் கேட்டுக் கொண்டு இருந்த போது இந்தக் குரல் எல்லாம் சினிமா உலகத்திலே எங்கே எடுபடும் என்று என் காதுபடவே விமர்சித்தவர்கள் பலர் உண்டு.

    அந்த விமர்சனங்களை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளாமல் அவருடைய குரலை நான் பயன்படுத்தினேன். ஆனால் அன்றைக்கு யார் யாரெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை விமர்சித்தார்களோ, அவர்கள் எல்லாம் பின்னாளில் எஸ்.பி.பி.யை தங்களது படங்களில் பாட வைத்தார்கள். அப்படிப் பாட வைத்ததுதான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சாதனை என்று பாராட்டினார் எம்ஜிஆர்.

  • எம்ஜிஆர் கொடுத்த அற்புத வாய்ப்பு… என்ன டைரக்டரே… இப்படியா மிஸ் பண்ணுவீங்க?

    எம்ஜிஆர் கொடுத்த அற்புத வாய்ப்பு… என்ன டைரக்டரே… இப்படியா மிஸ் பண்ணுவீங்க?


    நாடோடி மன்னன் படம் எம்ஜிஆருக்கு எவ்வளவு பெரிய பேரும், புகழையும், வெற்றியையும் தந்தது என்று எல்லாருக்கும் தெரியும். இந்தப் படம் ஓடினால் நான் நாடோடி. இல்லையேல் மன்னன் என்ற எம்ஜிஆரின் வாக்கு அப்படியே பலித்தது. படத்தைத் தயாரித்து, நடித்து, இயக்கினார் எம்ஜிஆர். படத்தில் இரு வேடங்கள் ஏற்று நடித்த எம்ஜிஆரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை முதலில் ஒரு இயக்குனருக்குக் கொடுத்தார். ஆனால் அவரோ மிஸ் பண்ணி விட்டார். ஏன்? என்னதான் நடந்ததுன்னு பார்க்கலாமா…

    தமிழ்சினிமா உலகின் பிதாமகன் என்று இன்று வரை போற்றிக் கொண்டு இருக்கிற கே.சுப்பிரமணியம் என்ற இயக்குனர் இயக்கிய முதல் திரைப்படம் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த பவளக்கொடி. இது 1934ல் வெளியானது. பல வெற்றிப்படங்களைத் தந்த அவர் இயக்கிய கடைசி படமாக பாண்டித்தேவன் அமைந்தது. எம்ஜி.சக்கரபாணி, டிகே.பகவதி, டிகே.பாலசந்தர், எஸ்.வி.சகஸ்ரநாமம், சந்திரபாபு, பிஎஸ்.சரோஜா, ராஜசுலோசனா, டிஏ.மதுரம் போன்ற பல முக்கியமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    இந்தப் படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டது. ஆனாலும் தோல்வியைத் தழுவியது. அதற்கு முக்கியமான காரணம் அந்தப் படத்தின் தலைப்புதான் என்று சொல்லப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பாண்டித்தேவனின் தோல்விக்கு எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் போன்ற நட்சத்திரங்களின் அலை அந்தக் காலகட்டத்தில் பலமாக வீசியதும் ஒரு முக்கியமான காரணம் என்பது அன்றைய திரைப்பட ஆர்வலர்கள் பலரின் கருத்தாக இருந்தது.

    பாண்டித்தேவன் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து இனி திரைப்படங்களை இயக்குவதில்லை என்று முடிவு எடுத்திருந்தார் கே.சுப்பிரமணியம். அந்தக் காரணத்தினால் தான் நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆர் அவரை இயக்கச் சொல்லி வாய்ப்பு கொடுத்தும் அவர் அதை ஏற்கவில்லையாம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • அப்பவே பேண்ட் வாத்தியம் முழங்க படப்பெட்டி ஊர்வலம்… அட அதுதான் அச்சாரம் போட்ட படமா?!

    அப்பவே பேண்ட் வாத்தியம் முழங்க படப்பெட்டி ஊர்வலம்… அட அதுதான் அச்சாரம் போட்ட படமா?!

    ரசிகர்கள் இப்போது தங்கள் அபிமான நாயகனின் படம் ரிலீஸ் ஆனால் அந்த திரையரங்குகளில் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். சிலர் படங்களில் நாயகன் கெட்டப் மாதிரியே தன்னை உருமாற்றிக் கொண்டு வந்து அசத்துகிறார்கள். படப்பிரிண்ட் வந்ததும் அதை ஊர்வலமாக எடுத்து வந்து பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் விதை யார் போட்டது? வாங்க பார்க்கலாம்.

    1931ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று சென்னை சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷன்ல அப்படி ஒரு கூட்டம். அந்த ஜனத்திரளைப் பார்த்து காந்திஜி தான் வர்றாரு போலன்னு பலரும் நினைத்தார்கள். ஆனால் அன்று கூடிய கூட்டம் எந்த ஒரு பிரமுகரையும் வரவேற்பதற்கு அல்ல. ஒரு திரைப்படத்தின் திரைப்படச் சுருளை வரவேற்பதற்கு.

    தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் படப்பெட்டி வந்தது. 31ம் தேதி கினிமா சென்ட்ரல் என்ற தியேட்டரில் திரையிடப்படுவதாக இருந்தது. அதற்காக காளிதாஸ் படப்பெட்டி அங்கு வந்து இறங்கிய உடனே ரசிகர்கள் அடைந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த பிலிம் சுருளை ரசிகர்கள் தலைமேல் வைத்துக்கொண்டு பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள்.

    இன்றைக்குப் பல முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வெளியாகும்போது அந்தப் படங்களின் பிரிண்டை எல்லாம் ரசிகர்கள் ஊர்வலமாக எடுத்துப் போகிறார்கள். அதற்கெல்லாம் விதைப்போட்டது என்றால் அது 1931ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று வெளியான காளிதாஸ் படம்தான் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

  • இசைப்புயலுக்கு இப்படி ஒரு நிலைமையா? பிரபலம் சொன்ன புரியாத புதிர்!

    இசைப்புயலுக்கு இப்படி ஒரு நிலைமையா? பிரபலம் சொன்ன புரியாத புதிர்!

    இசைப்புயல் என்று இன்று எல்லாரும் கொண்டாடிக் கொண்டு இருக்கின்ற ஏஆர்.ரகுமான் தமிழ்சினிமா உலகில் ஒரு புயலைப் போல் தான் நுழைந்தார் என்பது நாம் அறிந்த விஷயம். அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றிகளைக் குவிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அதன் காரணமாக இந்தியில் அவரது பாடல்களைப் பலரும் காப்பி அடிக்கத் தொடங்கினர். அதை எல்லாம் தடுப்பதற்கு ஏஆர்.ரகுமான் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தார்.

    ஆனால் அவரால் முடியவில்லை. அப்படிப்பட்ட சூழலில் இந்திப்படங்களுக்கு நேரடியாக இசை அமைத்தால் தான் இது போன்ற பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட முடியும் என்று ஒரு காலகட்டத்தில் முடிவு எடுத்தார். அப்படிப்பட்ட சூழலில் தான் ராம்கோபால் வர்மாவின் ரங்கீலா என்ற இந்திப்படத்துக்கு இசை அமைக்கக்கூடிய வாய்ப்பு வந்தது. ரங்கீலா பாடல்கள் இந்தியா முழுமைக்கும் எப்படிப்பட்ட ஒரு வெற்றியை அடைந்தது என்பது எல்லாரும் அறிந்த விஷயம்.

    அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏராளமான இந்திப்படத்துக்கு இசை அமைக்கக்கூடிய வாய்ப்பு ஏஆர்.ரகுமானைத் தேடி வந்தது. இன்று இந்திப்பட உலகம் என்னை ஒதுக்கப்பார்க்கிறது என்று பல பத்திரிகை பேட்டிகளில் பதிவு செய்து வருகிறார் ஏஆர்.ரகுமான். ஆனால் அவர் அந்தக் காலகட்டத்தில் எல்லா இந்திப்படங்களையும் ஒப்புக்கொண்டாரா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

    தன்னைத் தேடி வந்த படங்களில் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களுக்கு மட்டும் இசை அமைக்க அந்தக் காலத்தில் ஒப்புக்கொண்டவர் தான் ஏஆர்.ரகுமான். ஒரு காலத்துல தங்களுடைய படங்களுக்கு ஏஆர்.ரகுமான் இசை அமைப்பாரா என்று ஏங்கிக் கொண்டு இருந்த பல இந்திப்பட தயாரிப்பாளர்கள் ஏன் இன்றைக்கு ஓரம் கட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • காலத்தால் அழியாத காதலிக்க நேரமில்லை… உருவாகக் காரணமான அந்த இடம்!

    காலத்தால் அழியாத காதலிக்க நேரமில்லை… உருவாகக் காரணமான அந்த இடம்!

    ஸ்ரீதர் இயக்கிய விடிவெள்ளி படத்தைத் தயாரித்தது நடிகர் திலகம் சிவாஜிகணேசனும் அவரது நெருங்கிய நண்பருமான முத்துமாணிக்கமும். ஸ்ரீதருக்கு திருமணம் முடிந்த உடன் தம்பதி சமேதராக நீங்க ரெண்டு பேரும் எங்க ஊரான வேட்டைக்காரன்புதூருக்கு வந்து அங்கு ரெண்டு நாள் தங்கி இருக்க வேண்டும் என்று ஸ்ரீதருக்கு அழைப்பு விடுத்தார் முத்துமாணிக்கம். அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்ததால அவருடைய அழைப்பைத் தட்ட முடியாமல் வேட்டைக்காரன் புதூருக்குப் புறப்பட்டுச் சென்றார் ஸ்ரீதர்.

    அங்கு சென்று இருந்த சமயத்தில் தான் ஆழியாறு அணைக்கட்டைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு ஸ்ரீதருக்குக் கிடைத்தது. மலையின் அடிவாரத்திலே அற்புதமான அந்த அணையை அப்போதுதான் கட்டி முடித்து இருந்தார்கள். அந்த ரம்மியமான சூழலில் மனதைப் பறி கொடுத்த ஸ்ரீதர் இந்த ஆழியாறு அணைக்கட்டை நிலைக்களமாகக் கொண்டு ஒரு காதல் கதையை எழுதிப் படமாக்கினால் எப்படி இருக்கும் என்று சிந்திக்கத் தொடங்கினார்.

    அப்படி அவர் சிந்தித்ததன் விளைவாக உருவான ஒரு கதை தான் காதலிக்க நேரமில்லை. அது ஒரு மிகப்பெரிய படமாக அமைந்ததோடு மட்டும் இல்லாமல் ரவிச்சந்திரன் என்கிற ஒரு அற்புதமான கதாநாயகனையும், காஞ்சனா என்கின்ற அற்புதமான ஒரு கதாநாயகியையும் தமிழ் சினிமா உலகிற்குத் தந்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • ஜெய்சங்கர், நாகேஷ் அதுல கெத்துதான்… ஆனா உதாரணமா எடுக்காதீங்க!

    ஜெய்சங்கர், நாகேஷ் அதுல கெத்துதான்… ஆனா உதாரணமா எடுக்காதீங்க!

    தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஜெய்சங்கர். அதே போல அந்தக் காலகட்டத்தில் நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ். இவர்களைப் பற்றி வியக்கத்தக்க தகவலை நடிகர் சோ பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

    என்னுடைய அனுபவத்தில் சினிமாவில் சேரணும்னு ஆசையை வச்சிக்கிட்டு வெற்றி பெற்ற இருவர்னா அதுல ஒருவர் கதாநாயகன் ஆன ஜெய்சங்கர். இன்னொருவர் நகைச்சுவை நடிகரான நாகேஷ் என்கிறார் சோ. திரையுலகிலே கதாநாயகனாக உருவெடுப்பதை மனதிலே ஒரு லட்சியமாகவே வைத்துக் கொண்டு தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு சொன்னதை செய்தும் காட்டியவர் ஜெய்சங்கர்.

    அதே மாதிரி அசாத்தியமான ஒரு திறமை இருந்தால் தான் இந்த சினிமா உலகிலே முன்னேற முடியும் என்பதற்கு உதாரணமாக நான் நாகேஷைப் பார்க்கிறேன். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக தான் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை விட்டுட்டு, நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சி அதுக்குப் பின்னால கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று சினிமா உலகிலே ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக முன்னேறியவர் தான் நாகேஷ்.

    சினிமா உலகிலே சேர்வதற்கு இவங்க ரெண்டு பேரையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமா என்றால் நிச்சயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றுதான் நான் சொல்வேன் என்று சொன்னார் சோ. காலமும், நேரமும் ஒத்துழைத்தால் திரைப்பட வாய்ப்பு கிடைக்கும். என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவங்களுக்கும் இது பொருந்தும் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலே சோ தெரிவித்துள்ளார்.