Tag: MGR

  • குரல் சரியில்லேயே… இதெல்லாம் எடுபடுமா? எம்ஜிஆர் சொன்ன எஸ்பிபியின் செய்த சாதனை..!

    குரல் சரியில்லேயே… இதெல்லாம் எடுபடுமா? எம்ஜிஆர் சொன்ன எஸ்பிபியின் செய்த சாதனை..!

    பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எப்படிப்பட்ட குரலுக்குச் சொந்தக்காரர் என்றும் அவருடைய இசைத்திறனுக்கு எத்தனை இசை ரசிகர்கள் அடிமையாக இருக்கிறார்கள் என்பதும் எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அப்படிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலையே ஒரு காலகட்டத்தில் விமர்சித்தவர்கள் பலர் இருக்காங்க.

    இதை எம்ஜிஆரே ஒரு விழாவில் வெளிப்படுத்தியுள்ளார். சங்கராபரணம் படத்திலே மிகச்சிறப்பாகப் பாடியதற்காக குடியரசுத்தலைவரின் விருதும், பாராட்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குக் கிடைத்தது. அப்படி விருது கிடைத்த போது சென்னையிலே அதையொட்டி ஒரு பாராட்டு விழா அவருக்கு நடந்தது.

    அந்த விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, இன்று இந்த விழாவில் பாராட்டு பெறும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னுடைய அடிமைப்பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடல் பதிவு முடிந்து அதை நான் கேட்டுக் கொண்டு இருந்த போது இந்தக் குரல் எல்லாம் சினிமா உலகத்திலே எங்கே எடுபடும் என்று என் காதுபடவே விமர்சித்தவர்கள் பலர் உண்டு.

    அந்த விமர்சனங்களை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளாமல் அவருடைய குரலை நான் பயன்படுத்தினேன். ஆனால் அன்றைக்கு யார் யாரெல்லாம் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை விமர்சித்தார்களோ, அவர்கள் எல்லாம் பின்னாளில் எஸ்.பி.பி.யை தங்களது படங்களில் பாட வைத்தார்கள். அப்படிப் பாட வைத்ததுதான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சாதனை என்று பாராட்டினார் எம்ஜிஆர்.

  • எம்ஜிஆர் கொடுத்த அற்புத வாய்ப்பு… என்ன டைரக்டரே… இப்படியா மிஸ் பண்ணுவீங்க?

    எம்ஜிஆர் கொடுத்த அற்புத வாய்ப்பு… என்ன டைரக்டரே… இப்படியா மிஸ் பண்ணுவீங்க?


    நாடோடி மன்னன் படம் எம்ஜிஆருக்கு எவ்வளவு பெரிய பேரும், புகழையும், வெற்றியையும் தந்தது என்று எல்லாருக்கும் தெரியும். இந்தப் படம் ஓடினால் நான் நாடோடி. இல்லையேல் மன்னன் என்ற எம்ஜிஆரின் வாக்கு அப்படியே பலித்தது. படத்தைத் தயாரித்து, நடித்து, இயக்கினார் எம்ஜிஆர். படத்தில் இரு வேடங்கள் ஏற்று நடித்த எம்ஜிஆரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது. இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை முதலில் ஒரு இயக்குனருக்குக் கொடுத்தார். ஆனால் அவரோ மிஸ் பண்ணி விட்டார். ஏன்? என்னதான் நடந்ததுன்னு பார்க்கலாமா…

    தமிழ்சினிமா உலகின் பிதாமகன் என்று இன்று வரை போற்றிக் கொண்டு இருக்கிற கே.சுப்பிரமணியம் என்ற இயக்குனர் இயக்கிய முதல் திரைப்படம் எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த பவளக்கொடி. இது 1934ல் வெளியானது. பல வெற்றிப்படங்களைத் தந்த அவர் இயக்கிய கடைசி படமாக பாண்டித்தேவன் அமைந்தது. எம்ஜி.சக்கரபாணி, டிகே.பகவதி, டிகே.பாலசந்தர், எஸ்.வி.சகஸ்ரநாமம், சந்திரபாபு, பிஎஸ்.சரோஜா, ராஜசுலோசனா, டிஏ.மதுரம் போன்ற பல முக்கியமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    இந்தப் படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டது. ஆனாலும் தோல்வியைத் தழுவியது. அதற்கு முக்கியமான காரணம் அந்தப் படத்தின் தலைப்புதான் என்று சொல்லப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பாண்டித்தேவனின் தோல்விக்கு எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் போன்ற நட்சத்திரங்களின் அலை அந்தக் காலகட்டத்தில் பலமாக வீசியதும் ஒரு முக்கியமான காரணம் என்பது அன்றைய திரைப்பட ஆர்வலர்கள் பலரின் கருத்தாக இருந்தது.

    பாண்டித்தேவன் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து இனி திரைப்படங்களை இயக்குவதில்லை என்று முடிவு எடுத்திருந்தார் கே.சுப்பிரமணியம். அந்தக் காரணத்தினால் தான் நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆர் அவரை இயக்கச் சொல்லி வாய்ப்பு கொடுத்தும் அவர் அதை ஏற்கவில்லையாம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • அந்த விஷயத்துல ராஜாதேசிங்கு ஓடல… ஆனா மதுரை வீரன் டாப்… இதுதான் காரணமா?

    அந்த விஷயத்துல ராஜாதேசிங்கு ஓடல… ஆனா மதுரை வீரன் டாப்… இதுதான் காரணமா?

    பொதுவாக திரையுலகில் பாடுவாங்க. ஆனா ஆடத் தெரியாது. நல்லா நடிப்பாங்க. ஆனா சண்டைக்காட்சிகள் வராது. நல்லா சண்டை போட்டா சோகக் காட்சிகள் வராது. ஆனா எல்லாம் தெரிந்து எடிட்டிங், தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்தவங்க இருக்காங்களான்னு கேட்டா அந்தக் காலத்துல புரட்சித்தலைவர் எம்ஜிஆர். தியாகராஜபாகவதர் நல்லா பாடுவாங்க.

    ஆனா ஆடத் தெரியாது. பியு.சின்னப்பா எல்லாம் தெரிந்தவர். ஆனா அவருக்கு தொழில்நுட்பம் தெரியாது. எம்ஜிஆர் சதிலீலாவதியில காலடி எடுத்து வைத்தார். 1958ல தன்னோட சொந்தப் படமான நாடோடி மன்னனை இயக்குகிறார். டபுள் ஆக்ட்.

    இந்தப் படம் ஓடுனா நான் மன்னன். இல்லன்னா நாடோடிங்கறாரு. படம் பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அவரோட உலகம் சுற்றும் வாலிபன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. அவருக்கு நுணுக்கங்கள் எல்லாம் தெரியும். உதாரணத்துக்கு டிஆர்.ராமண்ணா இவரை வைத்து படம் இயக்குகிறார்.

    பாசம்னு ஒரு படம். கடைசியில கதாநாயகன் இறந்த போற மாதிரி காட்சி. வேண்டாம். இந்தப் படத்துல நான் இறந்து போற மாதிரி காட்சி வைத்தா ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு எம்ஜிஆர் சொன்னாராம். பாட்டு பெரிய ஹிட். ஆனா படம் ஹிட் இல்ல.

    நாளை நமதே படத்துல 2 எம்ஜிஆர்ல ஒருத்தர் கருப்பா திருடனா நடிச்சிருப்பாரு. அது ஓடல. பொதுவா நெகடிவ் கேரக்டர் பண்ண மாட்டாரு. அவரு இறந்த மாதிரி காமிச்ச ராஜா தேசிங்கு ஓடல. ஆனா அவரு இறந்து போற மாதிரி காமிச்சி சாமியாகிட்டாருன்ன மதுரை வீரன் ஓடுச்சு. பாட்டு, சண்டைக்காட்சி அவரு மேற்பார்வையில தான் நடக்கும்.

    கதாநாயகன், கதாநாயகி, சண்டைக்காட்சி, யாரு இசை அமைக்கணும்? யார் வசனம் எழுதணும் எல்லாமே அவருக்குத் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்துள்ளார்.

  • உதவி கேட்க ஓடோடி வந்த நாடோடி மன்னன் உதவியாளர்… எம்ஜிஆர் செய்த அந்த மகத்தான செயல்!

    உதவி கேட்க ஓடோடி வந்த நாடோடி மன்னன் உதவியாளர்… எம்ஜிஆர் செய்த அந்த மகத்தான செயல்!

    எம்ஜிஆரின் இயக்கத்தில் உருவான நாடோடி மன்னன் படத்தில் உதவி இயக்குனராக கோபாலகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்தார். அந்தப் படத்திலே மிகத் திறமையாக அவர் வேலை செய்ததைக் கண்ட எம்ஜிஆர் தன்னுடைய ஒரு படத்தை இயக்குகின்ற வாய்ப்பை அவருக்கு வழங்க வேண்டும் என்று கூட எண்ணினார்.

    அடிமைப்பெண் படத்தை இயக்கத் திட்டமிட்ட போது அந்த கோபாலகிருஷ்ணனையும், ராமதாஸையும் இணைத்து அவர்கள் ரெண்டு பேரையும் அந்த படத்தை டைரக்ட் செய்யச் சொல்லணும் என்பதுதான் எம்ஜிஆரின் எண்ணமாக இருந்தது. ஆனால் அவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்ததால அந்த வாய்ப்பு அவர்கள் கையை விட்டு நழுவிப் போனது. அதன்பிறகுதான் கே.சங்கர் அந்தப் படத்தை இயக்கினார்.

    அப்படிப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஒரு காலகட்டத்தில் வேலை இல்லாத காரணத்தால வறுமையில் வாடினார். வீட்டு வாடகையைக் கூட கொடுக்க முடியல. நான்கைந்து மாதம் வீட்டு வாடகைப் பாக்கி இருந்ததால அவரோட வீட்டு ஓனர் வீட்டைப் பூட்டிட்டு பணத்தைக் கொடுத்துட்டு வீட்டுக்குள்ள வாங்க. அதுவரைக்கும் சாவி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். யார் யாரிடமோ உதவி கேட்டுப் பார்த்தார் கோபாலகிருஷ்ணன். எங்கேயுமே பணம் கிடைக்கல.

    என்ன பண்றதுன்னே புரியல. அப்படிப்பட்ட சூழ்நிலையில அவருக்கு நினைவு வந்த ஒரே நபர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான். அப்போது பட்டிக்காட்டு பொன்னையா படத்தின் படப்பிடிப்பில் எம்ஜிஆர் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஓடோடிச் சென்றார் கோபாலகிருஷ்ணன். இவர் எம்ஜிஆரை சென்று பார்ப்பதற்கு முன்னாலே அவரைப் பார்த்த எம்ஜிஆர், அவரைத் தன் அருகில் அழைத்து என்ன விஷயம்? ஏன் இப்படி உடல் மெலிந்து இருக்கீங்க? என்ன பிரச்சனை என்று அவரைப் பார்த்துக் கேட்டார். ஓ என்று அழத் தொடங்கிய கோபாலகிருஷ்ணன் தன்னுடைய பிரச்சனை எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துரைத்தார்.

    நான்கைந்து மாதமாக வாடகைக் கொடுக்கலன்னு சொல்றீங்க. அப்படிப்பட்டவர் என்னை எப்போ வந்து பார்த்துருக்கணும்? நாலு மாசத்துக்கு முன்னாடியாவது என்னை வந்து பார்த்துருக்க வேண்டாமா? எவ்வளவு வாடகைன்னு சொல்லுங்க என்று அவரைப் பார்த்துக் கேட்டார். மூவாயிரம் ரூபாய் என்று அந்த கோபாலகிருஷ்ணன் சொன்ன உடனே சரி இன்று இரவுக்குள் அந்தப் பணம் உன்னை வந்து சேரும் என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் எம்ஜிஆர். உடனே பக்கத்தில் இருந்த ஸ்டண்ட் கலைஞரான ராம்கிருஷ்ணனை அழைத்தார். அவரிடம் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து இன்று இரவுக்குள் எப்படியாவது கொண்டு போய் கோபாலகிருஷ்ணனிடம் சேர்த்து விடுங்கள் என்று சொன்னார் எம்ஜிஆர். அன்று இரவு பெரும் மழை.

    பணத்தைக் காலையில் கொடுத்து விடலாமா என்ற எண்ணம் கூட ராம்கிருஷ்ணனுக்கு இருந்தது. ஆனாலும் எம்ஜிஆர் சொல்லி அனுப்பிச்சிருக்காரு. இன்று இரவுக்குள் பணம் வந்து சேர்ந்துடும்னு. எம்ஜிஆர் சொல்லியும் அதைக் கொடுக்கலைன்னா அவரோட வாக்கு தப்பி விடுமே. அது கூடாதுன்னு கொட்டும் மழையிலும் கோபாலகிருஷ்ணனிடம் சென்றார் ராம்கிருஷ்ணன். அந்த பத்தாயிரம் ரூபாயைக் கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்து விட்டு இதுல மூவாயிரம் ரூபாயை வாடகைக்குக் கொடுங்க.

    மிச்சம் ஏழாயிரம் ரூபாயை உங்களுக்காக வைத்துக் கொள்ளச் சொன்னார் எம்ஜிஆர் என்றார். அப்போது அந்தக் கோபாலகிருஷ்ணன் கண்களில் இருந்து தரதரவென்று கண்ணீர் வழிந்தோடிக் கொண்டு இருந்தது. எம்ஜிஆரை இன்றைக்கும் தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் எம்ஜிஆரோட மனிதாபிமானம் தான்.

  • எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

    எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

    தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம். அப்படி இருந்த அவரிடமே கதாநாயகியான ஒருவர் நேருக்கு நேராக மோதியுள்ளார். யார் என்ன சம்பவம்னு பார்க்கலாமா…

    நாடோடி மன்னன் படத்தில் எம்ஜிஆருக்கும், பானுமதிக்கும் பிரச்சனையா? அப்புறம் ஏன் சரோஜாதேவியை நடிக்க வைத்தார் எம்ஜிஆர் என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

    நாடோடி மன்னன் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியபோதே அந்தப் படத்தின் கதாநாயகியான பானுமதிக்கும், அந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்து இயக்கிய எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து விட்டன.

    ஒரு நாள் ஒரு காட்சியைத் திரும்ப திரும்ப படமாக்கியபோது இதுக்குத் தான் ஒரு நல்ல டைரக்டரைப் போட்டுப் படம் எடுத்துருக்கணும். கே.சுப்பிரமணியத்தைப் போட்டுப் படமாக்கி இருந்தா இது மாதிரி பிரச்சனை எல்லாம் வந்துருக்காது என எம்ஜிஆர் முகத்துக்கு நேராகவே கூறினார். அது மட்டும் இல்லாம அந்தப் படத்தின் பாடல்களின் போது, பாடல்களின் கம்போசிங்கின் போது எல்லாம் எம்ஜிஆருக்கும், பானுமதிக்கும் இடையே உரசல்கள் இருந்துக்கிட்டே தான் இருந்தது.

    அதன் காரணமாகத் தான் இனியும் அவரோட ஃபோர்ஷனைத் தொடர முடியாதுங்கறதால அதை அப்படியே கட் பண்ணிட்டு இன்னொரு கதாநாயகியை அறிமுகப்படுத்துவது என முடிவெடுத்தார் எம்ஜிஆர். அப்படி அந்தப் படத்துக்குள்ளே வந்தவர் தான் சரோஜாதேவி என்றார் எம்ஜிஆர்.

  • ஒரே பாடலில் இத்தனை விஷயமா…? கண்ணதாசன் எம்ஜிஆருக்கு கொடுத்த அதி அற்புத பாடல்!

    ஒரே பாடலில் இத்தனை விஷயமா…? கண்ணதாசன் எம்ஜிஆருக்கு கொடுத்த அதி அற்புத பாடல்!

    மனித குல வரலாற்றை ஒரு பாட்டுக்குள்ள சொல்றதே ரொம்ப சிரமம். ஆனால் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டுக்குள்ள அவ்வளவு அழகா சொல்லிருப்பாரு. அது என்னன்னு பாருங்க.

    1964ல் டிஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான படம் பணக்கார குடும்பம். மக்கள் திலகம் எம்ஜிஆர், சரோஜாதேவி, அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கவியரசர் கண்ணதாசன் பாடல் எழுதி டிஎம்.சௌந்தரராஜன், எல்ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே பாடல். இந்தப் பாட்டுக்கும், படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

    பணக்காரக் குடும்பம்னாலே குடும்பம் தொடர்பாகத் தான் பேசணும். அப்புறம் ஏன் இப்படி ஒரு பாடல்னு கேள்வி எழலாம். எம்ஜிஆர் படம்னாலே மக்கள் ஏதாவது ஒரு நல்லது சொல்வார்னு எதிர்பார்ப்பாங்க. இன்னொன்னு கவியரசர் கண்ணதாசனுக்கு திடீர்னு இந்த இடத்துல இந்தப் பாடலை வைத்தால் நல்லா இருக்குமேன்னு ஒரு எண்ணம் தோணும். அப்படி வந்தது தான் இந்தப் பாடல்.

    அசோகனின் மகள் சரோஜாதேவி. அப்பா வசதியான குடும்பமாக இருந்தாலும் அவரை விட்டு வெளியேறி விடுகிறார் எம்ஜிஆர். இவர் சரோஜாதேவியைக் காதலிக்கிறார். இடையில் பல எதிர்ப்புகள் வந்தாலும் கடைசியில் சரோஜாதேவியைத் திருமணம் செய்து கொள்கிறார். இதுதான் கதை. இந்தப் படத்தில் வரும் பாடல் தான் ஒன்று எங்கள் ஜாதியே. இந்தப் பாடலின் பல்லவியில் சமத்துவத்தைப் பேசி இருக்கிறார் கண்ணதாசன்.

    ”ஒன்று எங்கள் ஜாதியே… ஒன்று எங்கள் நீதியே… உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே…” இவ்ளோதான் பல்லவி. இங்கு கவனிக்க வேண்டியது ஏமாற்றுறவங்க எல்லாம் ஒருவர் பெற்ற மக்கள் அல்ல. உழைக்கும் மக்களே என்கிறார். அடுத்து பாடலில் சமத்துவத்தைக் கொண்டு வந்துள்ளார். நிறத்தில் அல்ல என அழுத்தமாகச் சொல்கிறார். ”வெள்ளை மனிதன் வியர்வையும், கருப்பு மனிதன் கண்ணீரும் உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே” என எந்த இடத்திலும் சந்தம் இடிக்காம அவ்வளவு நேர்த்தியாக அழகாக எழுதியுள்ளார் கவியரசர்.

    மன்னராட்சி, மக்களாட்சி என்று சொல்லி விட்டு ”இல்லை என்பது இல்லை நாங்கள் வாழும் நாட்டிலே…” என 2வது சரணத்தில் சொல்லி இருக்கிறார். இங்கும் உழைப்பைப் பற்றித் தான் பேசுகிறார். உழைக்கும் மக்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா இல்லை என்ற சொல்லே இருக்காது என்கிறார்.

    அடுத்த சரணத்தில் மனித குல வரலாறு எப்படி தோன்றியது என்பதை வெகு அழகாக சொல்லி இருக்கிறார். ”ஆதிமனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான். அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான். மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி பொன்னைத் தேடினான். நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான். இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான். வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்” என்று முக்காலத்தையும் நயம்படச் சொல்கிறார் கண்ணதாசன். இது படித்தவர், படிக்காதவர் என அத்தனை பேருக்கும் அவ்வளவு எளிதாகப் புரியும்.

  • 100வது நாள் விழாவுக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்… மறுகணமே எம்ஜிஆர் சொன்ன வார்த்தை!

    100வது நாள் விழாவுக்கு அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்… மறுகணமே எம்ஜிஆர் சொன்ன வார்த்தை!

    அந்தக் காலத்தில் எல்லாம் திரை உலகில் 100வது நாள் படம் ஓடுவது என்பது சாதாரண விஷயம். பல முன்னணி கதாநாயர்களின் படங்கள் இப்படி வெற்றி விழாவைக் கொண்டாடும். அதில் ஒன்று தான் இந்த ஜல்லிக்கட்டு படம். சத்யராஜ், சிவாஜி இணைந்து நடித்த இந்தப் படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்துள்ளார்.

    படம் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. படத்துக்கான வெற்றி விழாவில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். எம்ஜிஆர் கலந்து கொண்ட கடைசி சினிமா நிகழ்ச்சியும் இதுதான். எப்படி கலந்து கொள்ள ஒப்புக்கொண்டார்னு பாருங்க.

    ஜல்லிக்கட்டு படத்தின் பாராட்டு விழாவுக்கு அழைப்பு சொன்னதுமே எம்ஜிஆர் உடனே ஒத்துக்கிட்டாரா? இல்ல. முதல்ல வரலன்னு சொன்னாரான்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

    எனக்கே இது ஆச்சரியமான விஷயம். ஒருநாள் காலையில புரட்சித்தலைவர் எம்ஜிஆரை நான், சத்யராஜ், என்னுடைய சகோதரர் சித்ரா ராமு ஆகிய மூவரும் சந்தித்தோம். ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள் விழாவுல நீங்க கலந்துக்கணும்னு கோரிக்கை வைக்கிறோம். என்னைக்கு ஜல்லிக்கட்டு படத்தின் 100வது நாள்னு கேட்டாரு. டிசம்பர் 5ந் தேதி 100 நாள் விழா வருதுன்னு நான் சொன்னதும் விழாவை வச்சிக்கோங்க.

    நான் வர்றேன் என்று மறுகணமே சொல்லி விட்டார் எம்ஜிஆர். அப்படி உடனடியாக அவர் விழாவுக்கு வருவார்னு நாங்க மூவருமே கனவுல கூட நினைச்சிப் பார்க்கல அப்படிங்கறதுதான் உண்மை. இன்னைக்கு நினைச்சிப் பார்த்தா கூட அந்தளவுக்கு ஆச்சரியமா இருக்குது அந்த சம்பவம். அதற்கு முன்னால் இந்த மாதிரி தேதி கேட்ட உடனே எம்ஜிஆர் ஒப்புக்கொண்ட சம்பவங்கள் இருக்கான்னு எனக்குத் தெரியல என்கிறார் சித்ரா லட்சுமணன்.

  • பாக்யராஜின் சூப்பர்ஹிட் படத்துக்கு விருது கொடுக்க மறுத்த எம்.ஜி.ஆர்… காரணம் இதுதான்!..

    பாக்யராஜின் சூப்பர்ஹிட் படத்துக்கு விருது கொடுக்க மறுத்த எம்.ஜி.ஆர்… காரணம் இதுதான்!..

    பாக்யராஜ் இயக்கி நடித்து ஆயிரத்து 1981ம் வருடம் வெளியான திரைப்படம் அந்த ஏழு நாட்கள். இந்த படத்தில் அம்பிகா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கேரளாவிலிருந்து இசையமைப்பாளராகும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடும் வேடத்தில் பாக்யராஜ் நடித்திருந்தார். இந்த படத்தில் தமிழ் கலாச்சாரமான தாலியின் பெருமை பற்றி பாக்கியராஜ் பேசியிருந்தார்..

    பாக்யராஜை விரும்பிய அம்பிகா சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த ராஜேஷை திருமணம் செய்து கொள்வார். இதை தெரிந்துகொண்ட ராஜேஷ் அம்பிகாவை மீண்டும் பாக்யராஜுடன் சேர்த்து வைக்க ஆசைப்படுவார். ஆனால், பாக்யராஜ் ஏற்றுக்கொள்ளமாட்டார்.

    ‘நீங்கள் தட்டிய தாலியை கழட்டி எறியுங்கள்.. நான் சம்மதிக்கிறேன்’ என ராஜேஷிடம் சொல்வார். ராஜேஷ் தாலியை கழட்டி எறிய செல்லும்போது அம்பிகா அதை ஏற்கமாட்டார். அந்த காட்சி முடிந்ததும் ‘என் காதலி உங்கள் மனைவியாகலாம்.. ஆனால் உங்கள் மனைவி என் காதலியாக முடியாது’ என பன்ச் வசனம் பேசி படத்தை முடித்திருப்பார் பாக்யராஜ்..

    அந்த திரைப்படம் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. பாக்யராஜ் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். எனவே பாக்யராஜின் படங்களை எம்ஜிஆர் பார்ப்பது வழக்கம். இந்த படம் வெளியான போது தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆர் இருந்தார். ஆனாலும் அந்த படத்திற்கு தமிழக அரசு விருது கொடுக்கவில்லை.. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்திற்கு விருது கொடுக்க எம்ஜிஆர் மறுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்..

    அதற்கு காரணம் பாக்யராஜ் அந்த படத்தில் பாலக்காட்டு மாதவன் என்கிற கதாபாத்தில் நடித்திருந்தார். எம்ஜிஆர் பாலக்காட்டை சேர்ந்தவர் என்பதால் இந்த படத்துக்கு விருது கொடுத்தால் ‘எம்ஜிஆர் அந்த ஊரை சேர்ந்தவர். அதனால்தான் பாக்யராஜுக்கு விருது கொடுத்திருகிறார்’ என விமர்சனங்கள் வரும்.. மக்களின் அங்கீகாரமே இந்த படத்தை பெரிய விருது’ என பாக்கியராஜ் நேரில் அழைத்து எம்.ஜி.ஆர் சொன்னதாக தனது 50-வது ஆண்டு நிறைவு விழாவில் பாக்யராஜ் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

  • காக்கா ராதாகிருஷ்ணனுக்கு உயர்ந்த சம்பளம்… எம்ஜிஆர் செய்த பலே ஐடியா!

    காக்கா ராதாகிருஷ்ணனுக்கு உயர்ந்த சம்பளம்… எம்ஜிஆர் செய்த பலே ஐடியா!

    காக்கா ராதாகிருஷ்ணன் யாருன்னு நம்மில் பலருக்கும் தெரியும். இவர் தான் சிவாஜியையே சினிமாவுக்கு அழைத்து வந்தவர். ஆனால் அவர் எம்ஜிஆரைப் பற்றி என்ன சொல்றாருன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

    தமிழ்சினிமா உலகிலே எப்படிப்பட்ட சாதனையாளர் காக்கா ராதாகிருஷ்ணன் என்பது எல்லாருக்கும் தெரியும். நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்து அதில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தார் காக்கா ராதாகிருஷ்ணன். தான் அப்படிப்பட்ட சாதனைகளைச் செய்தேன் என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் ரெண்டு பேர்.

    அவங்களைக் குறிப்பிட்டே ஆகணும். அந்த ரெண்டு பேர்ல முதலிடத்தில் இருப்பவர் கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன். என்னுடைய வாழ்க்கையில விளக்கேற்றி வைத்தவர் அவர்தான். அவர் இல்லன்னா சினிமா உலகத்துல நான் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்க வாய்ப்பே இல்லை.

    அதே மாதிரி சினிமா உலகத்துல நான் மறக்க முடியாத இன்னொரு நபர் எம்ஜிஆர். தாய் மகளுக்குக் கட்டிய தாலிங்கற படத்துல நான் நடிச்சிக்கிட்டு இருந்தேன். இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு உங்களுக்கு சம்பளம் எவ்வளவுன்னு கேட்டார் எம்ஜிஆர். அதுக்கு மூவாயிரம் ரூபாய் என்றார் காக்கா ராதாகிருஷ்ணன். உடனே தயாரிப்பாளரை அழைத்தார் எம்ஜிஆர். அண்ணனுக்கு இந்தப் படத்துல 5000 ரூபாய் சம்பளம் கொடுங்க.

    அதுல 2000 ரூபாய் என் கணக்குல எடுத்துக் கொடுங்க என்றார் எம்ஜிஆர். இந்தப் படத்துல 5000 ரூபாய் சம்பளம் வாங்கியதுக்குப் பிறகுதான் சினிமா உலகிலே என்னுடைய சம்பளமே உயர்ந்தது. அதிகமான சம்பளத்தை எனக்கு வாங்கிக் கொடுத்ததைத் தாண்டி என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர். என்னுடைய குடும்ப நலத்தைப் பற்றியும், என்னிடம் விசாரித்தவர்.

    அவருக்கு அடுத்து என்மீது அதிகமான அக்கறைக் காட்டியவர்னா அது கமல்ஹாசன்தான். அவருடன் சேர்ந்து நடித்த தேவர்மகன் படத்தை என்னால மறக்கவே முடியாது. என் வாழ்நாளில் நான் நடித்த மிக முக்கியமான திரைப்படம் அது என்று ஒரு பத்திரிகை பேட்டியில் காக்கா ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.

  • நடிகர் நாடாளலாம் என நிரூபித்தவர் எம்.ஜி.ஆர் மட்டுமே; இன்னொருவர் பிறக்க வாய்ப்பில்லை – நடிகர் சிவகுமார்

    நடிகர் நாடாளலாம் என நிரூபித்தவர் எம்.ஜி.ஆர் மட்டுமே; இன்னொருவர் பிறக்க வாய்ப்பில்லை – நடிகர் சிவகுமார்

    தமிழக தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியலுக்கும் சினிமாவுக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பு யாவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் மற்றும் திரை வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

    தமிழக அரசியலின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், நாட்டை ஆண்ட நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தனி இடம் உண்டு. அவரது மறைவுக்குப் பிறகு, சிவாஜி கணேசன் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு தேர்தலைச் சந்தித்தபோதிலும், அவர் படுதோல்வியையே தழுவினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஒரு முன்னணி நடிகையாக இருந்தபோதிலும், அவர் தனிக்கட்சி தொடங்காமல் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் மூலமாகவே முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார். இவர்களைத் தொடர்ந்து, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் அரசியல் களத்தில் குதித்தாலும், அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

    எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலில் ஓரளவு சொல்லிக்கொள்ளும்படி தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த் மட்டுமே. 2006-ம் ஆண்டு தேமுதிகவை தொடங்கி களமிறங்கிய அவர், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். மாற்று சக்தியாக உருவெடுத்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து வரை உயர்ந்த அவரின் அரசியல் பயணம், எதிர்பாராத உடல்நலக்குறைவால் சரிவைச் சந்தித்தது.

    இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகுமார் ஒரு நடிகர் நாடாளலாம் என்பதைத் தமிழகத்தில் நிரூபித்துக் காட்டியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. அவரைப் போல் இன்னொருவர் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை. எம்.ஜி.ஆருக்கு இணையாக மக்கள் மத்தியில் மாபெரும் செல்வாக்கு பெற்றிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூட அரசியலில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை;, அவர் தோல்வியையே சந்தித்தார், என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
    இந்த சூழ்நிலையில், தற்போதைய முன்னணி நடிகர் விஜய் தீவிர அரசியலில் குதித்துள்ளார். சிவகுமாரின் இந்த பேச்சு தன்னை அடுத்த எம்ஜிஆராக நினைத்துகொண்டிருக்கும் விஜய்க்கு ஒரு எசரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

    மாபெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய், வரவிருக்கும் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எம்.ஜி.ஆரைப் போல அவர் வெற்றிவாகை சூடுவாரா அல்லது மற்ற நடிகர்களைப் போல அரசியல் களத்தில் சறுக்குவாரா என்பதற்கான விடையை எதிர்வரும் தேர்தல் முடிவுகள் மட்டுமே கூறும்.