Category: throwback

  • ஒரே குழப்பம்… எல்லாம் சொதப்பல் படங்கள்… கமலின் பாதையை அடையாளம் காட்டியது அவரா?

    ஒரே குழப்பம்… எல்லாம் சொதப்பல் படங்கள்… கமலின் பாதையை அடையாளம் காட்டியது அவரா?

    கமல் இன்று 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு முக்கியமான கதாநாயகன். அவருக்கு ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் இதுதான். கேட்டா அசந்து போயிடுவீங்க. வாங்க என்னன்னு பார்க்கலாம். 

    உணர்ச்சிகள் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால ஒரு தயாரிப்பாளரோட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தார். படத்தின் பூஜை அன்னைக்கு அந்ததயாரிப்பாளரைக் காணோம். எங்கே இருக்காருனு தேடிப் போனா, லிபர்டி தியேட்டர் எதிர்க்க  அப்சரா என்ற லாட்ஜில தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார். என்ன விஷயம்னு கேட்டப்ப, பணம் கொடுக்குறேன்னு சொன்ன பைனான்சியர் ஏமாத்திட்டாரு.

    என்ன பண்றதுன்னே தெரியல என்று சொன்ன அந்த தயாரிப்பாளரை முதலில் ஆறுதல் படுத்தினார் கமல். அதன்பிறகு அவரும், ஆர்.சி.சக்தியும் அந்த சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்த போதுதான் உணர்ச்சிகள் கதை உருவாயிற்று. அதைப் படமா எடுக்கலாம்னு முடிவு பண்ணினாங்க. அந்தப் படத்தை இயக்குவதற்கு ஆர்.சி.சக்திக்குக் கொடுக்கப்பட்ட முன்பணம் எவ்வளவுன்னு கேட்டா ஆச்சரியப்பட்டுருவீங்க. வெறும் 10 ரூபாய்.

    அந்தப் படத்தின் கதாநாயகியான எல்.காஞ்சனாவுக்கு 5 ரூபாய். இப்படி 15 ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் அது. பல பொருளாதார சிக்கல்கள் காரணமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்துல தனக்கு வந்த படவாய்ப்புகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு நடிக்க ஆரம்பித்தார் கமல். அப்போது நடித்த ஒரு சில படங்கள் அவருக்கே பிடிக்காதவையாக இருந்தன.

    ஆனாலும் வேற வழியில்லை என்றதால நடிக்க வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. நாம இதுமாதிரி படங்கள்ல நடிச்சிட்டு இருக்கோம். இதை எல்லாம் பார்த்துட்டு நண்பர்கள் கிழிச்சி தோரணம் கட்டுவாங்களே அப்படிங்கற பயம் கூட அந்தக் காலகட்டத்திலே கமலுக்கு இருந்தது. தமிழ் சினிமாவை கிழி கிழின்னு கிழிச்சிட்டு இவனும் இப்படிப்பட்ட படங்கள்ல நடிச்சிக்கிட்டு இருக்கானேன்னு அவங்க சொல்வாங்களே அப்படிங்கற ஒரு ஆதங்கம் கமலின் மனதில் இருந்தது.

    அப்போதுதான் அவள் அப்படித்தான் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தனக்குப் பிடிக்காத பல படங்களில் நடித்த பாவத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக அவசரம் அவசரமாக அவள் அப்படித்தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் கமல். அந்தக் குழப்பமான சூழ்நிலையில நான் தெளிவு பெற காரணமாக இருந்த ஒரே நபர்னா அவர் அனந்துதான். அவர்தான் சினிமாவில் என் பாதை என்ன என்பதை எனக்குக் காண்பித்தார் என்ற ஒரு பத்திரிகைப் பேட்டியில் பகிர்ந்துள்ளார் கமல். 

  • குடிபோதையில் வரத் தயங்கிய வாலி… ஏவிஎம் அவசர அழைப்பு… சூப்பர்ஹிட் நாகேஷ் பாடல் ரெடி!

    குடிபோதையில் வரத் தயங்கிய வாலி… ஏவிஎம் அவசர அழைப்பு… சூப்பர்ஹிட் நாகேஷ் பாடல் ரெடி!

    ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பிலும், கிருஷ்ணனுடைய இயக்கத்திலும் நாகேஷ் கதாநாயகனாக நடித்த படம் சர்வர் சுந்தரம். இந்தப் படத்துல மக்கள் மனதில் இடம்பெற்ற பாடல்களில் மக்கள் மனதிலே இன்றுவரை நிலை பெற்று இருக்கின்ற ஒரு பாடல்னா அது அவளுக்கென்ன அழகிய முகம் என்று தொடங்கும் பாடல் தான். அந்தப் பாடல் காட்சியில் அட்டகாசமாக நடனம் ஆடி நடித்து இருப்பார் நாகேஷ். அந்தப் பாடல் எப்படிப்பட்ட சூழலில் எழுதப்பட்டது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

    சர்வர் சுந்தரம் உருவான காலகட்டத்தில் கவிஞர் வாலிக்குத் திருமணம் ஆகவில்லை. தனிக்கட்டையாகத்தான் இருந்தார். அன்றைக்கு வேற எதுவும் வேலை இல்லை என்றதால் 6 மணிக்கே மதுபாட்டிலை திறந்தவர் ஏறக்குறைய கால் பாட்டிலை குடித்து முடித்து விட்ட நிலையில்தான் அவருடைய வீட்டு வாசலிலே ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரில் இருந்து விஸ்வநாதனின் நிர்வாகியான தாடி சுந்தரம் அவசரம் அவசரமாக வந்து இறங்கினார். அண்ணேன்… உடனடியாகக் கிளம்புங்க.

    உங்களுக்காக எம்எஸ்.விஸ்வநாதன் காத்துக்கிட்டு இருக்காரு. இன்னைக்கே பாட்டு கம்போசிங்கை முடிச்சி நாளைக்கு காலையிலேயே பாட்டை ரெக்கார்ட் பண்ணனும்னு சொன்னார். அப்போது எந்தக் கம்பெனிக்கு என்று வாலி கேட்டார். ஏவிஎம் நிறுவனம்னு பதில் வந்தது. அப்படி சொன்ன உடனே கவிஞர் வாலிக்கு சப்த நாடியும் அடங்கி விட்டது என்றுதான் சொல்லணும். இப்ப நான் இருக்குற சூழ்நிலையில பாட்டு எழுதுறதுக்கு அங்கே வந்தா, பாட்டு எழுதுற கேரியரே முடிஞ்சிரும். இதுக்கு அப்புறம் எனக்கு யாரும் பாட்டு எழுதுறதுக்கு வாய்ப்பே தர மாட்டாங்க.

    அதனால என்னை மன்னிச்சிரு. என்னால வர முடியாது என்றார் கவிஞர் வாலி. அவர் அப்படி பேசிக்கிட்டு இருக்கும்போதே விஸ்வநாதனுடைய இன்னொரு உதவியாளர் சதன் அடுத்த கார்ல அங்கே வந்து இறங்கினார். என்ன அண்ணேன், எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க. நீங்க இங்கே பேசிக்கிட்டு இருக்கீங்க. உடனே சட்டையை மாட்டிட்டு கிளம்புங்க என்றார் சதன். இனி தப்ப முடியாது. போய்த்தான் ஆகணும்கற சூழலில் அவசரம் அவசரமாக குளித்து விட்டு சட்டையை எல்லாம் மாட்டிக்கிட்டு வீட்டுல இருந்த சென்டை எல்லாம் மேல தெளிச்சிக்கிட்டு ஏவிஎம் நிறுவனத்தை நோக்கிச் சென்றார் வாலி.

    கம்போசிங் நடைபெற்ற அறை மிகவும் சின்ன அறை. அதனால அந்த அறை முழுவதும் மதுவின் வாசம் வீச ஆரம்பித்தது. அண்ணேன் ரொம்ப வாசனை வருது. அதனால இந்த வெத்தலைப்பாக்கைப் போட்டுக்கோங்கன்னு சொல்லி வெத்தலைப் பாக்கு பெட்டியை அவர் பக்கம் தள்ளினார் எம்எஸ்.விஸ்வநாதன். அடுத்து எம்எஸ்.விஸ்வநாதன் டியூனை வாசிக்க அரை மணி நேரத்தில் அந்தப் பாடலை எழுதி முடித்தார் கவிஞர் வாலி. அப்படி எழுதப்பட்ட அந்தப் பாடல் தான் அவளுக்கென்ன அழகிய முகம் என்ற அந்தப் பாடல். 

  • புதுமாப்பிள்ளையானாலும் உட்காரத் தயங்கிய சீர்காழி கோவிந்தரராஜன்… என்ன ஒரு குரு சிஷ்ய உறவு?!

    புதுமாப்பிள்ளையானாலும் உட்காரத் தயங்கிய சீர்காழி கோவிந்தரராஜன்… என்ன ஒரு குரு சிஷ்ய உறவு?!

    பிரபல புல்லாங்குழல் மேதையான சுவாமிநாத பிள்ளைதான் தெய்வீக இசைக்கலைஞர் என்று போற்றப்படுகின்ற சீர்காழி கோவிந்தரராஜனுடைய குரு. 12ஆண்டுகள் குருகுல வாசம் இருந்து அவரிடம் இசையைக் கற்றுக் கொண்டவர் சீர்காழி கோவிந்தரராஜன். குருமார்கள்ல சுவாமிநாத பிள்ளை கொஞ்சம் வித்தியாசமானவர் என்றுதான் சொல்ல வேண்டும்.

    தன்னுடைய சிஷ்யர்கள்ல கூட ரொம்ப மரியாதையோடுதான் அவர் எப்போதும் அழைப்பாராம். சீர்காழி கோவிந்தரராஜனை அழைக்கும்போது கூட கோவிந்தரராஜ் ஐயா என்றுதான் அந்தக் காலகட்டத்திலே அவர் அழைத்து இருக்கிறார். தன்னுடைய குருநாதர் மீது அளவுகடந்த மரியாதை வைத்து இருந்தவர் தான் சீர்காழி கோவிந்தரராஜன். அதற்கு உதாரணம் தான் இந்த சம்பவம். 

    1956ல் சீர்காழி கோவிந்தரராஜூ உடைய திருமணம் நடைபெற்ற போது அந்த திருமண விழாவில் புல்லாங்குழல் கச்சேரியை செய்தவர் அவரது குருநாதரான சுவாமிநாத பிள்ளை. குருநாதர் எதிர்க்க நாற்காலி போட்டு அமர்கின்ற பழக்கம் சீர்காழி கோவிந்தரராஜனுக்கு இல்லை என்பதால் அவர் கச்சேரி செய்யும்போது முழுக்க முழுக்க நின்று கொண்டே இருந்து இருக்கிறார்.

    மேடையில் இசைக்கச்சேரி செய்தபடியே இதைப் பார்த்த சுவாமிநாத பிள்ளை, சீர்காழி கோவிந்தராஜன் பக்கம் திரும்பி உட்காரு என்று சொல்லி கையை காட்டி இருக்கிறார். ஆனாலும் சீர்காழி கோவிந்தரராஜன் உட்காரல. உடனே தன்னுடைய பக்கத்தில் இருந்த ஒருவரை அழைத்து முதல்ல அவனை உட்காரச் சொல்லு என்று சொல்லி அனுப்பி இருக்கிறார் அந்த குருநாதர்.

    அதற்குப் பின்னால தான் சீர்காழி கோவிந்தரராஜன் அந்த மேடையில் உட்கார்ந்தாராம். அந்தக் காலகட்டத்துல குரு சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருந்து இருக்கிறது என்பதற்கு இதை விட என்ன உதாரணம் இருக்கு? மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

  • பாடலைப் படித்த எஸ்பிபி கேட்ட அந்தக் கேள்வி… வைரமுத்துவின் பளிச் பதில்!

    பாடலைப் படித்த எஸ்பிபி கேட்ட அந்தக் கேள்வி… வைரமுத்துவின் பளிச் பதில்!

    வயதுக்கும், கவிதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டால் இல்ல அப்படிங்கறதுதான் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என் மீது வைத்த குற்றச்சாட்டு என்று அவரிடம் இருந்து பதில் வருகிறது. அப்படி ஒரு கருத்தை வைரமுத்துவின் மீது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பதிவு செய்வதற்கு காரணமாக இருந்தது

    இரண்டாம் உலகம் படத்துக்காக வைரமுத்து எழுதிய ஒரு பாடல். பாடல் பிரிவுக்கு எஸ்பி.பாலசுப்பிரமணியம் வந்த உடனே, அவருக்கு வைரமுத்து பாடலைச் சொல்லச் சொல்ல எஸ்பி.பாலசுப்பிரமணியம் எழுதிக் கொள்வதுதான் எப்போதும் வழக்கம். அன்றைக்கும் அப்படித்தான். வரிகளை வைரமுத்து சொல்லச் சொல்ல, எஸ்பி.பாலசுப்பிரமணியம் எழுதிக்கொண்டே வந்தார்.

    கண்டார் மயங்கும் வண்டார் மலரே. நின்றோர் மொழி சொல்லடி. உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி என்ற வரிகளை வைரமுத்து சொன்னபோது, எழுதுவதை நிறுத்தி விட்டு வயதுக்கு மீறி சிந்திக்கிறீர்கள் என்று வைரமுத்துவைப் பார்த்து எஸ்பி.பாலசுப்பிரமணியம் சொன்னார்.

    எழுத்தாவது இளமையாக இருக்கட்டுமே என்று அவருக்குப் பதில் சொல்லி இருக்கிறார் வைரமுத்து. படைப்பாளன் முதிர முதிர, படைப்பு இளமையாவது கலையின் ரசவாதம் என்பதுதான் வைரமுத்துவின் கருத்து. 

  • ஒரு டியூனை வாங்க ரொம்ப லேட்டாகுதுப்பா… ஏஆர்.ரகுமான் சொன்ன பதிலடி!

    ஒரு டியூனை வாங்க ரொம்ப லேட்டாகுதுப்பா… ஏஆர்.ரகுமான் சொன்ன பதிலடி!

    இசைப்புயல் ஏஆர்.ரகுமான்கிட்ட ஒரு டியூனை வாங்குறது அவ்வளவு எளிதான விஷயம் இல்ல. பல நாள்கள் அதுக்காகும் அப்படிங்கற பலமான விமர்சனம் அவர் மேல உண்டு. ஏன் அப்படி ஒரு விமர்சனம் தன் பேரில் வருகிறது என்பது பற்றி மிக அழகாக ஒரு விஷயத்தைப் பதிவு செய்துள்ளார் இசை அமைப்பாளர் ஏஆர்.ரகுமான். 

    என்னுடைய வருகைக்கு முன்னால இசை அமைப்பாளர் ஒரு ஆர்மோனியத்தை வச்சிக்கிட்டு தனனனா னானனா அப்படின்னு பாடி ஒரு டியூனைக் கொடுப்பாங்க. அந்த டியூன கேக்குற டைரக்டருக்கோ, தயாரிப்பாளருக்கோ அது பிடிச்சிருந்தா ஓகே. இல்லன்னா அடுத்த டியூனைப் போடச் சொல்வாங்க. 15, 20நிமிஷத்துல இதே மாதிரி ஒரு டியூனைப் போட்டுக் கொடுப்பாங்க.

    ஆனா என்னைப் பொருத்தவரைக்கும் அதுல ஒரு மாறுதல் செய்யணும்னு நினைச்சேன். ஏறக்குறைய 70 சதவீதம் ஒரு பாடலை நிறைவு செய்துதான் நான் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் போட்டுக் காமிப்பேன். 70 சதவீதம் ஒரு பாடலை நிறைவு செய்யணும்னா எத்தனை நாள் ஆகும்? அப்படின்னு உங்களுக்கு நல்லா தெரியும்.

    அந்த பாடல் அந்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் பிடிச்சிருந்தா ஓகே. அவர்களுக்கு பிடிக்காம வேற டியூனைப் போடுங்கன்னு சொன்னா திரும்பவும் அப்படி ஒரு பாடலை உருவாக்குவதற்கு குறைந்தபட்சம் ஆறேழு நாள்கள் ஆகும். இந்த விஷயத்துல நானே ஒரு டிராப்ல மாட்டிக்கிட்டேன் அப்படின்னுதான் சொல்லணும்.

    இதனால தான் என்னுடைய பாடல்கள் கொஞ்சம் தாமதமாகின்றன என அந்தக் கட்டுரையில் இசைப்புயல் ஏஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளார். 

  • இளையராஜா போட்ட தாலாட்டு குத்து பாட்டா மாறிடுச்சி!.. நாயகனில் நடந்த சம்பவம்!…

    இளையராஜா போட்ட தாலாட்டு குத்து பாட்டா மாறிடுச்சி!.. நாயகனில் நடந்த சம்பவம்!…

    ஒரு இசையமைப்பாளர் ஒரு திரைப்படத்தில் ஒரு சூழ்நிலைக்காக ஒரு பாடலை உருவாக்குவார். ஆனால் அது நன்றாக இருந்தும் கூட அந்த டியூன் நிராகரிக்கப்படலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அப்படி நிராகரிக்கப்பட்ட அந்த டியூனை அதே இசையமைப்பாளர் வேறு படத்திற்கு பயன்படுத்துவார் அல்லது அந்த டியூனை மாற்றி அதே படத்தில் கூட அவர் பயன்படுத்துவார்.

    இப்படி பல சம்பவங்கள் இளையராஜாவின் இசை வாழ்வில் நடந்திருக்கிறது. அப்படி ஒன்றுதான் ‘நிலா அது வானத்து மேலே’ பாடல். 1987ம் வருட வெளிவந்த நாயகன் திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலுக்கு ஜனகராஜும், குயிலும் இணைந்து நடனமாடியிருந்தனர்.

    போதைப்பொருட்களை கமல்ஹாசன் ஒரு படகில் கடத்துவார். போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிந்து அங்கு வருவார்கள்.. போதை பொருளை ஒரு மூட்டையில் வைத்து அதில் உப்பு வைத்து கட்டி கடலுக்கு அடியில் போட்டு விடுவார். அந்த சூழ்நிலையில்தான் அந்த  ‘நிலா அது வானத்து மேலே’ பாடல் வரும். மிகவும் ஜாலியான ஒரு குத்துப் பாடல் அது.

    song

    ஆனால் இந்த பாடல் முதலில் குத்து பாடலாக உருவாக்கப்படவில்லை என இசைஞானி இளையராஜா கூறியிருக்கிறார். ஊடகம் ஒன்றில் பேசிய அவர் நாயகன் படத்தில் இடம்பெற்ற ‘நாயகன் படத்தில் வரும் ‘தென்பாண்டி சீமையிலே’ பாட்டுக்கு மாறுதலாக நான் போட்ட தாலாட்டு பாடல்தான் அந்த டியூன்.. ஆனால் அந்த சூழலுக்கு அந்த டியூன் பயன்படுத்த முடியாமல் போனதால் அதே பாடலை குத்துப்பாட்டாக மாற்றி ‘நிலா அது வானத்து மேலே’ பாடலாக மாற்றினோம்’ என தெரிவித்திருக்கிறார்.

    இந்த பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாயகன் திரைப்படம் மணிரத்தினம் மற்றும் கமல்ஹாசன் இருவருக்கும் முக்கிய படமாக அமைந்தது.

  • Nayagan: நாயகன் படத்தால் நஷ்டம்தான்!.. ஒரு லாபமும் இல்லை!..தயாரிப்பாளர் மகள் பேட்டி..

    Nayagan: நாயகன் படத்தால் நஷ்டம்தான்!.. ஒரு லாபமும் இல்லை!..தயாரிப்பாளர் மகள் பேட்டி..

    மணிரத்னம இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம்தான் நாயகன். இந்த திரைப்படத்தை முக்தா ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

    பி.சி.ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மும்பையில் தமிழர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த வரதராஜ முதலியாரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தை மணிரத்னம் உருவாக்கியிருந்தார். இளைஞன், நடுத்தர வயது, முதியவர் என பல தோற்றங்களிலும் கமல் அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார்.

    கமல் மற்றும் மணிரத்னம் இருவரின் திரை வாழ்விலும் நாயகன் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல் பெற்றார். தற்போது வரை தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக நாயகன் இருக்கிறது. சினிமாவை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இந்த திரைப்படம் இருக்கிறது.

    nayagan

    அதேநேரம், வியாபாரரீதியாக இந்த படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்ததா என்றால் இல்லை. இந்த படத்தை தயாரித்திருந்த முக்தா சீனிவாசனின் மகள் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘நாயகன் படம் உருவான போது பட்ஜெட் 50 லட்சம் என முடிவு செய்து ரூ.10 லட்சம் லாபம் வைத்து 60 லட்சத்திற்கு வியாபாரம் செய்துவிட்டோம். ஆனால், படம் முடியும்போது ஒரு கோடியை தொட்டுவிட்டது.

    இந்த படத்தில் இடம் பெற்ற நான் சிரித்தால் தீபாவளி பாடலை மும்பையில் உள்ள தாராவியில் எடுக்க திட்டமிட்டோம். ஆனால், கூட்ட நெரிசல் காணமாக அங்கே எடுக்க முடியவில்லை. எனவே, சென்னையிலேயே 25 லட்சம் செலவில் தோட்டா தரணி செட் போட்டார். படத்தின் பாதி பட்ஜெட் அந்த பாட்டிலேயே போய்விட்டது’ என அவர் கூறியிருக்கிறார்.

    நாயகனோடு வெளிவந்த ரஜினியின் மனிதன் திரைப்படம் நாயகனை விட அதிக வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • மருந்துல தேன் தடவி கொடுத்த மணிரத்னம்… ரோஜா உருவானது இப்படிதானா?

    மருந்துல தேன் தடவி கொடுத்த மணிரத்னம்… ரோஜா உருவானது இப்படிதானா?

    ஒரு திரைப்படத்தின் கதையை எழுதும்போது எதை எதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு நான் எழுதுவேன்னு மணிரத்னம் பத்திரிகை ஒன்றில் பேட்டி கொடுத்துள்ளார். அப்படி என்னதான் சொல்றாருன்னு பாருங்க.

    படமாக்குவதற்கு ஏதாவது வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்தா இது மாதிரி கதை எல்லாம் ஜனங்க பார்க்கவே மாட்டாங்க. இந்த கதைக்கு எல்லாம் தியேட்டர்ல கூட்டமே வராது. வசூலே ஆகாதுன்னு இந்த துறையிலே 34 வருடம் ஊறி கொட்டை போட்ட பலர் சொல்வாங்க. அப்படி அவங்க சொல்றதைக் கேட்கும்போது எல்லாம் ஜனங்களுடைய டேஸ்ட்டை நிர்ணயம் பண்றதுக்கு இவங்க யாருன்னு எனக்குள்ள அப்படி ஒரு கோபம் வரும். இந்த விஷயத்துக்காக ஒரு படம் ஓடும்.

    இந்த விஷயத்துக்காக படம் ஓடாது. அப்படின்னு எல்லாம் கண்ணை சுருக்கி பார்க்கறது எல்லாம் பழைய பார்முலா. உதாரணத்துக்கு என்னுடைய இயக்கத்தில உருவான ரோஜாவை எடுத்துக்கங்க. அது கொஞ்சம் வித்தியாசமான கதை தான். காஷ்மீர் தீவிரவாதிகளைப் பற்றி அந்தப் படத்தினுடைய பிற்பகுதியில் தான் நான் அதிகமா சொல்லி இருப்பேன். அந்த தீவிரவாதிகளைப் பற்றி அந்த காலகட்டத்துல அவ்வளவாக தமிழ்நாட்டுல இருந்தவங்களுக்குத் தெரியாது என்பதுதான் உண்மை.

    அப்படிப்பட்ட ஆடியன்ஸ்கிட்ட இந்தக் கதை போய் சேரணும். அதனாலதான் அந்த தீவிரவதிகளை கதையைச் சுற்றி ஒரு அழகான ஒரு திரைக்கதையை அமைத்தேன். அந்தப் படத்தினுடைய ஆரம்பத்துல இரண்டு கதாபாத்திரங்களுக்கு மத்தியில காதல் பெருக்கெடுத்து ஓடும்.

    அப்படிப்பட்ட காதலர்கள் படத்தின் பிற்பகுதியில் எப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பதைத்தான் சாதாரணமாக சொல்வார்கள். மருந்துல தேன் தடவிக் கொடுக்கணும்னு. அப்படி அந்தப் படத்திலே கொடுத்திருந்தேன் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் மணிரத்னம் தெரிவித்துள்ளார். 

  • வாலியின் பாடலைக் கூச்சத்தோடு மறுத்த எம்ஜிஆர்… அப்புறம் நடந்தது இதுதான்!

    வாலியின் பாடலைக் கூச்சத்தோடு மறுத்த எம்ஜிஆர்… அப்புறம் நடந்தது இதுதான்!

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்றெல்லாம் வாலி எழுதிய பல பாடல்கள் எம்ஜிஆரை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற பாடல்களாக அமைந்தன என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். அது போன்ற பல பாடல்களை எம்ஜிஆருக்கு எழுதிய வாலி, இதுபோன்ற பாடல்களை எழுதுங்கன்னு என்னிடம் ஒருநாளும் கேட்டுக்கொண்டதில்லை.

    இதெல்லாம் நான் தன்னிச்சையாக புனைந்த பாடல்கள். இன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால், வள்ளல், மன்னன் என்றெல்லாம் தன்னைப்பற்றி எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்து இருக்கிறார். அவர்பால் இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவருடைய உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்ததாலும் நான்தான் அவரைப் பற்றி அப்படிப் போற்றிப் புகழ்ந்து பாடல்களை எழுதினேன்.

    ஒரு காலகட்டத்திலே நான் அவருக்காக எழுதிய ஒவ்வொரு வரியும் அப்படியே பலிக்க ஆரம்பித்தது. தமிழிலே ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். உங்க சொல் என்றும் செல்லும் சொல்லாகவே இருக்க வேண்டும். நானே அனுபவப்பூர்வமாகப் பார்த்து இருக்கிறேன்.

    உங்க வாக்கு அப்படியே பலிக்கிறது. அதனால் நீங்க யாருக்குப் பாடல் எழுதினாலும் அவர்களைப் புகழ்ந்து தான் எழுத வேண்டுமே தவிர அவர்களை இகழ்ந்தோ அல்லது அவர்களைக் குறைசொல்லியோ எந்த பாட்டையும் எழுதவே கூடாது என்று என்னிடம் எம்ஜிஆர் பலமுறை சொல்லி இருக்கிறார் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார் கவிஞர் வாலி. 

  • என் மகனை விட திறமையானவர்கள் நிறைய பேர் இருக்காங்க!.. செம ஃபிராங்காக பேசிய மாதவன்!..

    என் மகனை விட திறமையானவர்கள் நிறைய பேர் இருக்காங்க!.. செம ஃபிராங்காக பேசிய மாதவன்!..

    ஜிடிஎன் படத்தின் ப்ரோமோசனில் ஈடுப்பட்டிருக்கும் நடிகர் மாதவனை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் நேர்காணல் செய்தபோது, தனது சினிமா பயணம், அரசியல், குடும்பம் மற்றும் மகன் வேதாந்த் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

    அப்போது பேசிய மாதவன், நான் தொடர்ந்து பயோபிக் படங்களில் நடிக்கவில்லை. ‘ராக்கெட்ரி’ படத்திற்குப் பிறகு ‘லெகசி’ என்ற வெப் சீரிஸிலும், ‘சர்க்கிள்’ என்ற படத்திலும் நடித்துள்ளேன். ஆனால் அவை இன்னும் வெளியாகவில்லை. ‘ஜிடிஎன்’ வெளியாகும்போது அதனால் தொடர்ந்து பயோபிக் படங்களில் நடிப்பது போல தோன்றலாம்.

    மேலும், தற்போதைய அரசியல் சூழலில் நல்லது செய்தாலும் விமர்சனம் வரும்; தவறு செய்தாலும் விமர்சனம் வரும். எதைச் செய்தாலும் அதை குறை சொல்ல ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். எனக்கு அரசியலுக்கு வரும் ஆசையே இல்லை. சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. சிறுவயதிலிருந்தே அரசியல் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. ஆனால் அரசியல் பின்னணியில் ஆழமான ஆய்வுடன் ஒரு நல்ல கதை வந்தால், அந்தப் படத்தில் கண்டிப்பாக நடிப்பேன்” என்று தெரிவித்தார்.

    இந்தத் துறைக்கு வந்து 25 ஆண்டுகளாகிறது. இதுவரை யாரைப் பற்றியும் தவறாக பேசியதில்லை. வாழ்க்கையில் நான் பெரிதாக கஷ்டப்பட்டதில்லை. எந்த தயாரிப்பாளரிடமும் வாய்ப்பு கேட்டு சென்றதில்லை. 

    தன் மனைவியை பற்றி பேசிய அவர், நீங்கள் உங்கள் பெற்றோருடன் 20 ஆண்டுகள் மட்டுமே இருந்திருக்கிறீர்கள். ஆனால் என்னுடன் 26 ஆண்டுகளாக வாழ்கிறீர்கள். அதனால் உங்களைப் பற்றி அவர்களை விட எனக்குத்தான் அதிகம் தெரியும் என்று என் மனைவி அடிக்கடி கூறுவார்” என சிரித்தபடி பகிர்ந்துகொண்டார்.

    மகன் வேதாந்த், சர்வதேச அளவிலான நீச்சல் வீரராக இருந்தாலும், அவரைவிட சிறப்பாக நீந்தும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர் என் மகன் என்பதால் அனைவருக்கும் தெரிகிறார். இவ்வளவு சிறிய வயதிலேயே கிடைத்திருக்கும் இந்தப் பிரபலத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள், எப்போதும் அடக்கத்துடன் இரு என்று நான் அவரிடம் அறிவுறுத்தியுள்ளேன் என்றார். மாதவனின் இந்த வெளிப்படையான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.