Author: sankaran v

  • கடும் போராட்டம்… இருந்தும் சிவாஜியை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் சொன்ன அதிசய தகவல்..!

    கடும் போராட்டம்… இருந்தும் சிவாஜியை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் சொன்ன அதிசய தகவல்..!

    நடிகர் திலகம் சிவாஜியின் தேவர் மகன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து இருந்தவர் தான் காக்கா ராதாகிருஷ்ணன். அவர்தான் நடிகர் திலகம் சிவாஜியை நடிப்பதற்கே அழைத்துக் கொண்டு வந்தவர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். வாங்க அதைப் பற்றிப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொல்லக் கேட்போம்.

    திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் குடியிருந்தவர்கள் தான் காக்கா ராதாகிருஷ்ணனும், சிவாஜியும். அந்தக் காலகட்டத்தில் காக்கா ராதாகிருஷ்ணனுக்கு நாடகம்னா உயிர். நாடகங்களுக்குப் போகும்போது தனியாகப் போக மாட்டார். உடன் சிவாஜியையும் அழைத்துச் செல்வார். நாங்க ரெண்டு பேரும் நாடகத்துக்குப் போனோம்னா ஒருத்தருக்கு ஒருத்தர் கூட பேசிக்க மாட்டோம். நாடகத்தில எப்படி நடிக்கிறாங்கன்னு அவங்களையே உன்னிப்பாகக் கவனிப்போம் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் காக்கா ராதாகிருஷ்ணன்.

    தினமும் இதுபோல நாடகத்துக்கு சிவாஜியை அழைத்துச் செல்வதால உன் பையன் கண்ட கண்ட இடத்துக்கு எல்லாம் கூட்டிப்போய் என் பையனைக் கெடுக்குறான்னு கூட சிவாஜியின் அம்மா, எங்க அம்மாக்கிட்ட சண்டை போட்டுருக்காங்க. ஒரு காலகட்டத்துல நான் எப்படியோ முயற்சி பண்ணி எம்.கே.தியாகராஜபாகவதர் நாடகக்கம்பெனில சேர்ந்தேன். என்கூட நீயும் வான்னு அந்த நாடகக்கம்பெனிக்கு சிவாஜியை அழைத்தேன்.

    நாடகக்கம்பெனிக்கு வந்தா ஒழுங்கா சாப்பாடு போடுவாங்களா? என்னையும் மேடையில் ஏற்றி நடிக்க வைப்பாங்களான்னு 108 கேள்விகளைக் கேட்டு அதுக்குப் பிறகுதான் என்கூட சிவாஜி நாடகக்கம்பெனிக்கு வந்தார் என்கிறார் காக்கா ராதாகிருஷ்ணன். நாடகக்கம்பெனியில நான் சேர்த்து விட்ட அந்தப் பையன் ஒரு நடிகனாக இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுப்பான்னு நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலே காக்கா ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.

  • விஜய் பட பாடலில் இதுவரை இல்லாத புதுமை … இயக்குனரைப் பாராட்டிய வைரமுத்து!

    விஜய் பட பாடலில் இதுவரை இல்லாத புதுமை … இயக்குனரைப் பாராட்டிய வைரமுத்து!

    துள்ளாத மனமும் துள்ளும் படத்தை இயக்கியவர் எழில். பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய ‘தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற மேகம்…’ என்ற பாடலை எழுத வாய்ப்புக் கொடுத்ததற்காக இயக்குனர் எழிலைப் பாராட்டினார். இந்தப் பாடலுக்காக இதுவரை பயன்படுத்தாத ஒரு சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

    இல்லாததை நான் எல்லாம் செஞ்சித் தாரேன் என்ற நிலையில் காதலன் காதலியைப் பார்த்துப் பாடுகிறான். இது காதலில் சாத்தியம். நிஜவாழ்க்கையில் இது முடியாது. இசை அமைத்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார். படத்தில் அத்தனை பாடல்களும் சூப்பர் தான்.

    அதிலும் இந்தப் பாடல் சூப்பர் ரகம். வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்ஙனம் காப்பாய்? என்று காதலி கேட்பாள். அதற்கு காதலன், கண்ணே உனை என் கண்ணில் வைத்து இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன் என்று காதலன் பதில் தருகிறான். இதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமாகுமா? இதே கேள்வியைப் பாடலிலும் காதலி கேட்கிறாள். சாத்தியம் ஆகுமா? என்று. அதற்கு காதலன் நான் சத்தியம் செய்யவா என்று பதில் தருகிறான் காதலன்.

    இப்படித்தான் பாடல் முழுவதும் அன்பை மிகைப்படுத்த பல விஷயங்களை கவிஞர் எழுதியுள்ளது சிறப்பு. அதிலும் அழகே எனை எங்ஙனம் காப்பாய் என்ற வரியில் ‘எங்ஙனம்’ என்ற வார்த்தையை இதுவரை தமிழ்த்திரை உலகில் எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லை. இந்த சொல்லை இயக்குனர் எழில் அனுமதித்து இருந்ததற்காக வைரமுத்து அவரைப் பாராட்டியுள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

  • ரசிகர்களுக்குள் நடக்க இருந்த பெரும் மோதல்… தவிர்க்க எம்ஜிஆர், சிவாஜி செய்த ஐடியா!

    ரசிகர்களுக்குள் நடக்க இருந்த பெரும் மோதல்… தவிர்க்க எம்ஜிஆர், சிவாஜி செய்த ஐடியா!

    தமிழ்சினிமா உலகின் அடையாளங்களாக இருந்த நட்சத்திரங்கள்னா ஒண்ணு மக்கள் திலகம் எம்ஜிஆர். இன்னொன்னு நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது குறையவில்லை. ஆனால் அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் எப்படிப்பட்ட நட்பு இருந்ததுன்னு தெரியுமா? இதோ அதற்கான ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.

    1957ல் நான் விரும்பும் நட்சத்திரம் என்ற பெயரில் குமுதம் ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்று விரும்பியது. அதனுடைய முக்கிய நோக்கம் என்னன்னா நான் விரும்பும் நட்சத்திரம் எம்ஜிஆரா.., சிவாஜியா… என்று ரசிகர்களைப் பார்த்துக் கேட்பதுதான்.

    அப்படிப்பட்ட போட்டியை நடத்தினால் நிச்சயமாக தங்களுடைய ரசிகர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் வரும் என்று உணர்ந்ததால் எம்ஜிஆர், உடனடியாகக் குமுதம் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘இது போன்ற போட்டியை நாங்க வரவேற்கவும் இல்லை. ரசிக்கவும் இல்லை… என்று எழுதினார்.

    எம்ஜிஆர் மட்டுமல்ல. அவர் அப்படி ஒரு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜியும் குமுதம் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினார். இப்படி ஒரு போட்டியை நீங்க நடத்தப் போறீங்க என்ற செய்தி வந்தபோதே உங்க நிருபரைக் கூப்பிட்டு ‘இது போன்ற போட்டியை நடத்தாதீங்கன்னு நான் திட்டவட்டமாக சொல்லிட்டேன். அதனால அன்புகூர்ந்து இதுபோன்ற போட்டியை நீங்க நடத்தாதீங்க’ன்னு எழுதினார்.

    ரெண்டு பேருக்கும் நடுவில் எப்படிப்பட்ட போட்டி இருந்த போதும் ஒரு பிரச்சனைன்னு எப்படி இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்வதற்காகத் தான் இந்த சம்பவத்தை நான் குறிப்பிட்டு இருக்கிறேன் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

  • கௌரவம் படத்தால் உயர்ந்து நின்ற சிவாஜி! கண்ணனாக நடித்ததன் ரகசியம்!

    கௌரவம் படத்தால் உயர்ந்து நின்ற சிவாஜி! கண்ணனாக நடித்ததன் ரகசியம்!

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பல படங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். 3 வேடங்களில் நடித்துள்ளார். நவராத்திரி என்ற படத்தில் 9 வேடங்களில் நடித்துள்ளார். பார்க்குற எல்லாருக்கும் என்ன தோணும்னா படம் முழுவதும் தன்னை ஆக்கிரமிக்கணும்னு சிவாஜி நினைக்கிறாரோன்னு தோணும். சிவாஜியோடு பல படங்களில் நடித்தவர் ஏஆர்.எஸ். நாடகங்களிலும் நடித்துள்ளார். அவருடைய நாடகக்குழுவான UAA-யில் கண்ணன் வந்தான் என்ற நாடகம் தான் பின்னாளில் கவுரவம் படமானது.

    அதில் பாரிஸ்டர் ரஜினிகாந்தாகவும் சிவாஜி நடித்து இருப்பார். அவரது மகனான கண்ணன் வேடத்திலும் சிவாஜி நடித்து இருப்பார். இதைப் பார்த்து விட்டு ஏஆர்எஸ், சிவாஜியிடம் நீங்க இந்த ரஜினிகாந்த் வேடத்தை மட்டும் பண்ணிட்டு, அந்தக் கண்ணன் வேடத்துக்கு வேற யாரையாவது போட்டுருக்கலாம் இல்லையான்னு கேட்டார். அதுக்கு சிவாஜி சொன்ன பதில் என்னை ஒரு அரைமணி நேரம் சிந்திக்க வைத்தது என்று சொல்கிறார் ஏஆர்எஸ்.

    அதற்கு சிவாஜி என்ன பதில் சொன்னாருன்னு பாருங்க. பாரிஸ்டர் ரஜினிகாந்தோட ரோலை நான் பார்த்த உடனே படம் முழுக்க ஆக்கிரமிக்கிற ரோல்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். அதுல நான் மட்டும் கவனம் செலுத்தி நடிச்சிருந்தா, நிச்சயமா இந்தப் படம் பார்த்துட்டுப் போற எல்லா மக்களின் மனதிலும் அந்த பாரிஸ்டர் ரோல் மட்டும்தான் இருக்கும். கண்ணன் பாத்திரம் தெரியாமல் போயிருக்கும்.

    அப்படிப்பட்ட பாத்திரத்துல ஒரு இளம் நடிகரைப் போட்டுட்டு எதுக்கு வீணடிக்கணும்? அதன் காரணமாகத்தான் அந்தப் பாத்திரத்தையும் நான் ஏற்று நடித்தேன் என்று ஏஆர்எஸ்.சுக்குப் பதில் சொன்னார் சிவாஜி. வெளியில இருந்து பார்க்குறவங்களுக்கு என்ன தோணும்? சிவாஜி எல்லா பாத்திரத்திலும் நடிக்கணும்னு நினைக்கிறாரு போல. அந்தப் பாத்திரத்தைக் கூட விட்டுக் கொடுக்கல என்பதாகத்தான் இருக்கும். ஆனா அதுக்குள்ள எப்படிப்பட்ட ஒரு நுட்பமான காரணம் இருந்ததுன்னு இப்பதானே தெரியுது.

  • ரஜினியின் முதல் படம் முதல் சீன்… அட இத்தனை பாடங்களை சொல்கிறதா?

    ரஜினியின் முதல் படம் முதல் சீன்… அட இத்தனை பாடங்களை சொல்கிறதா?

    முதல் படம், முதல் சீன் என்றால் எப்பேர்ப்பட்ட நடிகருக்கும் நினைவு இருக்கும். அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டார்கள். பெரும்பாலும் கஷ்டப்பட்டுத் தான் சினிமாவுக்குள் நுழைந்து இருப்பார்கள். ஆனால் அதுவே அவர்களுக்குப் பாடமாகவும் அமையும்.

    அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு இரும்புக் கதவைத் திறந்து கொண்டு தமிழ்சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் ரஜினிகாந்த். அந்தப் படத்திலே வாய்ப்பு கிடைத்த போது இது ஜஸ்ட் ஒரு வாய்ப்புன்னு நினைச்சீங்களா, இல்ல இது வாழ்க்கைன்னு நினைச்சீங்களான்னு ஒரு பத்திரிகை நிருபர் ரஜினியிடம் கேட்டார்.

    எப்படி அதை வாய்ப்புன்னு நினைக்க முடியும்? இதை என்னுடைய வாழ்க்கைன்னு நினைச்சிட்டுத் தான் அந்தக் கதவைத் திறந்தேன். ஏன்னா என்னோட சினிமா, டிராமான்னு இருந்த ஆர்வத்துல இந்த பஸ் கண்டக்டர் வேலையில இருந்து என்னைத் தூக்கி எறிஞ்ச நேரம் அது. இப்படி ஒரு வாழ்க்கை அமையும்னு நான் நினைச்சிக்கூட பார்க்கல. எவ்ளோ தூரத்தைக் கடந்து வந்துட்டேன்னு அந்த நிருபருக்கு சர்வ சாதாரணமாக பதில் சொன்னார் ரஜினி.

    அப்படி அவர் சாதாரணமாக சொன்னாலும் அதுக்குப் பின்னால எவ்ளோ உழைப்பு இருக்கு? எவ்வளவு போராட்டங்களை எல்லாம் சந்திச்சிட்டு வந்துருக்கிறார் ரஜினி என்பதை நாம் அறிவோம். ஆனால் இதற்கெல்லாம் ஆதரவாக இருந்தது எதுன்னா அந்த இரும்பு கதவைத் திறக்கும்போது இதுதான் என்னோட வாழ்க்கைன்னு நினைச்சிக்கிட்டு அதைத் தீர்மானித்துக் கொண்டு திறந்தாரே. அதுதான் இங்கே ரொம்ப முக்கியமான விஷயம்.

    அதுதான் இந்த எதிர்ப்புகளை எல்லாம் சந்திக்கின்ற வலுவையும் பல பிரச்சனைகளை சந்திக்கின்ற போராட்ட குணத்தையும் ரஜினிக்குக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்பதை யாரால் அறிய முடியும்?

  • ஜெயலலிதா கேட்ட கடவுள் பற்றிய கேள்வி… அசத்தலாகப் பதில் சொன்ன எம்ஜிஆர்!

    ஜெயலலிதா கேட்ட கடவுள் பற்றிய கேள்வி… அசத்தலாகப் பதில் சொன்ன எம்ஜிஆர்!

    புரட்சித்தலைவர் படங்களில் அனல் பறக்க தத்துவ கருத்துக்கள் புரட்சிகரமாக இருக்கும். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நச் நச்சென்று இருக்கும். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வர். ஆனால் அவரது படங்களில் கடவுள் சம்பந்தமான காட்சி அதிகம் இருக்காது. அவருக்கு கடவுள் பக்தி உண்டா, இல்லையா என்று பார்க்கலாம்.

    எம்ஜிஆருடைய தாயாரான சத்யபாமா அம்மையார் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். ஒரு பக்கம் காளியை வணங்கினார். இன்னொரு பக்கம் திருமாலை வணங்கினார். எம்ஜிஆருக்கு இஷ்ட தெய்வம் எது? எந்தெந்த தெய்வங்களை எல்லாம் வணங்கினார் என்பது பற்றி பொம்மை பத்திரிகையில் எம்ஜிஆரைப் பேட்டி காண வாய்ப்பு கிடைத்த போது ஜெயலலிதா அவரைப் பார்த்துக் கேட்டார்.

    கடவுள் பக்தி உண்டா என்று ஜெயலலிதா கேட்டபோது உண்டு என்று எம்ஜிஆர் பதில் அளித்தார். நீங்கள் கோவிலுக்குப் போவீர்களா என்று கேட்டார் ஜெயலலிதா. அதற்கு எம்ஜிஆர், திருப்பதிக்கு 2 முறை போய் வந்திருக்கிறேன். முதல் தடவை நான் திருப்பதிக்குச் செல்லும்போது எனக்கு 12 அல்லது 13 வயது இருக்கும். அப்போது நான் நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டு இருந்தேன்.

    2வது தடவை நான் சென்றது மர்மயோகி படம் வெளியானபோது. திருப்பதியைப் பொருத்தவரைக்கும் நான் 2வது முறை போனதுதான் கடைசி. அதற்குப் பிறகு திருப்பதிக்கு நான் போகவில்லை. வேறு கோவில்களுக்கு நான் சென்று இருக்கிறேன். கடவுள் மீது தீராத பக்தி எனக்கு உண்டு. அதனால்தான் கோவிலுக்குப் போகிறேனே தவிர அங்கு போய் சாமிக்கிட்ட எனக்கு அது வேணும், இது வேணும்னு கேட்டு ஒரு நாளும் நான் பிரார்த்தனை செய்தது இல்லை என பதில் சொல்லி இருக்கிறார்.

  • சூப்பர் படத்தை மிஸ் பண்ண பார்த்த சூப்பர்ஸ்டார்…! இயக்குனரிடம் அப்படியா கேட்டாரு?

    சூப்பர் படத்தை மிஸ் பண்ண பார்த்த சூப்பர்ஸ்டார்…! இயக்குனரிடம் அப்படியா கேட்டாரு?

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்டைல் மட்டும் தான் தெரியும் நடிப்பு எல்லாம் வராது என்று சொல்பவர்களுக்கு இந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும் ரஜினியால் இப்படி கூட நடிக்க முடியுமா என்று? அவ்வளவு அற்புதமான படம்.

    அதுதான் ஆறிலிருந்து அறுபது வரை. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேரக்டராகவே வாழ்ந்து இருப்பார். வழக்கமான ஸ்டைல், பஞ்ச் டயலாக் எல்லாம் கிடையாது.

    1979ல் பஞ்சு அருணாசலம் கதை எழுத எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியானது இந்தப் படம். ரஜினிக்கு ஜோடியாக படாபட் ஜெயலட்சுமி நடித்துள்ளார். சோ, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் கண்மணியே காதல் என்பது, வாழ்க்கையே வேஷம், ஆண்பிள்ளை என்றாலும் என முத்து முத்தான பாடல்கள் உள்ளன.

    இந்தப் படத்தின் போது ரஜினிகாந்த் திடீரென பாதிப் படத்தின்போது நடிக்காமல் தயங்கிக் கொண்டே இருந்துள்ளார். இதுக்கு என்ன காரணம்னு படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சில ஆச்சரிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

    ஆறிலிருந்து அறுபது வரை படத்துல தான் எனக்கும் ரஜினிக்கும் ஒரு பிரச்சனை வந்தது. அது வெறும் படம் அல்ல. எங்க வாழ்க்கையில நடந்த சம்பவங்களின் தொகுப்பு. பாதி படம் நடிச்சிக்கிட்டு என்ன சார் தம்பி, தங்கைக்கு இவ்ளோ உதவி செய்றேன். இப்படி நன்றி கெட்டத்தனமா பண்ணுவாங்களா? இதுல ஏதோ லாஜிக் இடிக்குதுன்னு சொன்னார்.

    அப்புறம் நானும் பஞ்சு அருணாச்சலமும் ஒரு 5000 அடி எடுத்து காமிக்கிறோம். அதைப் பாரு. உனக்குப் புடிக்கலைன்னா கதையை மாத்திடலாம்னு சொன்னோம். சொன்ன மாதிரி எடுத்து காமிச்சதுக்கு அப்புறம் எங்களை அப்படியே கட்டிப் புடிச்சிக்கிட்டு சார் ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ண பார்த்தேன். நீங்க என்னை சரியா வழி நடத்திட்டீங்கன்னு சொன்னார் ரஜினி என்கிறார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

  • அரை மணி நேரத்தில் 6 பாடல்கள்… இளையராஜா காட்டிய அதிரடி!

    அரை மணி நேரத்தில் 6 பாடல்கள்… இளையராஜா காட்டிய அதிரடி!

    இசைஞானி என்றால் இளையராஜா தான். அவருக்கு இந்தப் பட்டம் அவ்வளவு சாதாரணமாகக் கிடைத்து விடவில்லை. அந்தளவுக்கு அவரது ஒர்க் இருந்தது. ஒரு காலத்தில் இளையராஜா இல்லாத தமிழ்சினிமா இல்லை என்ற நிலை இருந்து வந்தது.

    80 மற்றும் 90காலகட்டங்களில் உள்ள படங்களைப் பார்த்தால் பெரும்பாலும் இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான தமிழ்ப்படங்களாகத் தான் இருக்கும். அந்த வகையில் அவரிடம் இருந்து தனது படத்துக்கு எப்படி பாடலைப் பெற்றேன் என்று இயக்குனர் ராஜ்கபூர் வீடியோ ஒன்றில் இப்படி தெரிவித்துள்ளார்.

    தாலாட்டு கேட்குதம்மா படத்தை நான் இயக்கினேன். அந்தப் படத்துக்கான கதையை இளையராஜாவிடம் அங்கங்கே ஸ்கிப் பண்ணி சொன்னேன். அது அவருக்குப் புரிஞ்சு போச்சு. உடனே சிச்சுவேஷனை சொல்லுன்னாரு. சொன்னதும் ஆர்மோனியத்துல அவரது கைகள் விளையாடின. டக் டக்னு அரை மணி நேரத்துல 6 பாட்டைக் கொடுத்துட்டாரு. அதை அப்படியே வாங்கிட்டு வந்து பொள்ளாச்சி பக்கம் சூட்டிங்கிற்குப் போயிட்டேன் என்கிறார் ராஜ் கபூர்.

    அந்தக் காலகட்டத்தில் தான் இதயம் படமும் வெளியாகி உள்ளது. எங்கு பார்த்தாலும் பாண்டி பஜார் கடைகளில் எல்லாம் இதயமும், தாலாட்டு கேட்குதம்மா படப்பாடல்களும்தான் ஒலிக்குமாம். நேந்துகிட்ட நேர்த்திக்கடன், சுட்டி சுட்டி, சொன்ன பேச்சை, அண்ணனுக்கு, எம்மா எம்மா, அம்மா எனும் ஆகிய பாடல்கள் உள்ளன. 1991ல் இந்தப் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. பிரபுவுக்கு ஜோடியாகக் கனகா நடித்துள்ளார்.

  • மாப்பிள்ளை இவருதான் காமெடி… செந்திலின் நிஜ வாழ்க்கையிலுமா? சகதியில் வசமா சிக்கிக்கிட்டாரே!

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பிரபல காமெடி நடிகர் செந்தில் நடித்த படையப்பா படத்தில் பிரமாதமா ஒரு காமெடி இருக்கும். மாப்பிள்ளை இவருதான். ஆனா இவரு போட்டுருக்கற சட்டை என்னதுன்னு ரஜினி சொல்வார். எப்படின்னா பொண்ணு பார்க்கப் போகும்போது சகதியில் சிக்கி விழுந்து விடும் அவருக்கு டிரஸ் எல்லாம் சகதியாகிப் போய்விடும்.

    அப்போது ரஜினியிடம் டிரஸ் கேட்பார். ரஜினியின் டிரஸ்சை செந்தில் போட்டுக் கொள்வார். அப்போது கூட்டத்தைப் பார்த்ததும் போவோர் வருவோர் எல்லாம் ‘என்ன பொண்ணு பார்க்கப் போறீங்களா? மாப்பிள்ளை யாரு?’ன்னு கேட்பாங்க. ‘மாப்பிள்ளை இவருதான். ஆனா இவரு போட்டுருக்குற டிரஸ் என்னது’ன்னு ரஜினி சொல்வார்.

    ‘அதனால தான் டிப் டாப்பா இருக்காரு…’ன்னு எல்லாரும் சொல்வாங்க. அது செந்திலுக்கு எரிச்சலைத் தந்து விடும். உடனே ‘படையப்பா இனி மாப்பிள்ளை நான்தான். ஆனா நான் போட்டுருக்குற டிரஸ் உன்னது இல்லன்னு சொல்லணும்’னு செந்தில் சொல்வார். அப்போ ஒருவர் கூட்டத்தைப் பார்த்து விடுவார்.

    ‘அண்ணே மாப்பிள்ளை இவருதான்.ஆனா இவரு போட்டுருக்குற டிரஸ் என்னது இல்ல’ன்னு ரஜினி சொல்வார். ‘அவன் கேட்டானா…’ன்னு எரிந்து விழுவார் செந்தில். ரஜினி அமைதியாக இருப்பார். கடைசியில் ‘மாப்பிள்ளை நான் தான். ஆனா நான் போட்டுருக்குற டிரஸ் பத்தி மறந்துரு’ன்னு சொல்வாரு. அப்போ ஒரு பெண் ‘இதுல மாப்பிள்ளை யாரு..?”ன்னு கேட்பாங்க. ‘மாப்பிள்ளை இவருதாம்மா. ஆனா இவரு போட்டுருக்குற டிரஸ் பத்தி மறந்துட்டேன்’னு ரஜினி சொல்வார்.

    டென்ஷனின் உச்சிக்கே சென்ற செந்தில் ‘படையப்பா…’ன்னு போட்டுருக்குற அவரோட டிரஸ்சை கழற்றிக் கொடுத்துவிட்டு ‘எனக்கு டிரஸ்சும் வேணாம். கல்யாணமும் வேணாம். வாழ்க்கை பூரா பிரமச்சாரியாகவே இருந்துடறேன்’னு வெறும் அண்ட்ராயருடன் ஓடிவிடுவார். இது படத்தில் ரொம்பவே காமெடியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    அது போல செந்திலின் நிஜ வாழ்க்கையிலும் கிராமத்திற்குச் சென்று பெண் பார்க்கப் போகும்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது மழைக்காலம். ரோட்டில் தண்ணீரை ஒரு பக்க வயலில் இருந்து மறுபக்கத்திற்கு கால்வாய் போல தோண்டி விட்டுள்ளனர்.

    அப்போது செந்தில் வந்த கார் அந்த சகதியில் சிக்கிக் கொண்டது. அக்கம்பக்கத்தில் உள்ள இளைஞர்கள் ஏ காரு சிக்கிக்கிடுச்சுடான்னு வந்து பாண்டியராஜன் படத்தில் தள்ளிவிடுவது போல தள்ளிவிட்டார்களாம். இந்த தகவலை செந்திலின் மனைவி கலைச்செல்வியே யூடியூப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  • Pushba2: புஷ்பா 2 படத்தின் 2ம் நாள் வசூல்…. மிரட்டிட்டாங்களே… போறபோக்கப் பார்த்தா 1000 கோடி தான்..!

    புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 5ம் தேதி அதன் இரண்டாம் பாகம் வெளியானது. சுகுமார் இயக்கியுள்ளார். வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்துள்ளது.

    இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத்பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். பாட்டு, பைட் சூப்பர்னு சொல்வாங்க. ஆனா இதுல சூப்பரோ சூப்பர்னும் சொல்லலாம். தேவிஸ்ரீபிரசாத், சாம் சிஎஸ் ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

    சாதாரணமா இரண்டரை மணி நேரம் படத்தையே ரசிகர்களால பொறுமையா உட்கார்ந்து பார்க்க முடியல. இந்தப் படமோ கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடுது. அப்படி இருந்தும் ரசிகர்களைக் கொஞ்சம் கூட சோர்வடைய விடாதவகையில் படுமாஸாக எடுத்துள்ளனர்.

    இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் கோரியோகிராபர் அற்புதமான டான்ஸ் அமைத்துள்ளார். இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு அம்மன் பாடல் வருகிறது.

    அதில் அம்மன் கெட்டப்பில் சேலையைக் கட்டியபடி அல்லு அர்ஜூன் ஆக்ரோஷமாக நடனம் ஆடுகிறார். இதைப் பார்த்த பெண் ரசிகை ஒருவர் தியேட்டரிலேயே அருள் வந்து சாமி ஆடி விட்டாராம். இந்த வீடியோ இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

    முதல் நாளில் வசூல் 174.9 கோடியைத் தொட்டது. 2ம் நாளில் இந்திய அளவில் 90.10கோடியை வசூலித்துள்ளது. ஆக இதுவரை மொத்தமாக சேர்த்து வசூல் சேர்த்து உலகளவில் 400 கோடியை கடந்துள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் இதன் வசூல் மேலும் அதிகரித்து இன்னும் சில தினங்களில் 1000 கோடியைத் தொடுவதற்கு வாய்ப்புள்ளது.

    படத்தின் முதல்நாள் அன்று ஐதராபாத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க அல்லு அர்ஜூன் வந்துள்ளார். அப்போது வந்த ஒரு தாயும், மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி சின்னா பின்னமானார்கள். இந்த நெரிசலில் தாய் உயிரிழந்தாள். அவரது 9 வயது மகன் மூச்சுத்திணறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு அல்லு அர்ஜூன் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

    அந்தப் பதற்றம் அடங்குவதற்குள் மும்பை பாந்த்ராவில் படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது மர்ம நபர் ஒருவர் தியேட்டரில் ஸ்பிரே அடித்துள்ளார். அது பலருக்கும் வாந்தி, கண் எரிச்சலை ஏற்படுத்தி திரையரங்கை விட்டு வெளியே வந்துள்ளார்களாம்.